×

மேற்கு ஆசியா போர் நிறுத்தத்திற்கான 15 அம்ச திட்டத்தை அனுப்பியது அமெரிக்கா: ஈரான் நிராகரிப்பு

துபாய்: ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போர் நேற்று 26வது நாளை எட்டியது. இப்போரால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக எந்த ஆதாரமும் இன்றி அறிவித்துள்ளார். இது போலிச் செய்தி என ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், மேற்கு ஆசியா போர் நிறுத்தத்திற்கான 15 அம்ச திட்டத்தை ஈரானுக்கு பாகிஸ்தான் மூலமாக அமெரிக்கா அனுப்பி வைத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.

பெயர் வெளியிடாத 2 பாகிஸ்தான் அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர். இந்த 15 அம்ச திட்டமானது ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறைத்தல், அணுசக்தி ஒத்துழைப்பு, பொருளாதார தடைகளை தளர்த்தல், சர்வதேச அணுசக்தி அமைப்பின் கண்காணிப்பு, ஏவுகணை உற்பத்தி குறைப்பு, ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது போன்ற விவகாரங்களை உள்ளடக்கியதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால் இந்த தகவலை முதலில் ஈரான் ராணுவம் திட்டவட்டமாக மறுத்தது.

ஆனாலும் பின்னர் ஈரான் அரசு தொலைக்காட்சியின் ஆங்கில மொழி ஒளிபரப்பாளரான பிரஸ் டிவி, பெயர் குறிப்பிடப்படாத அதிகாரியை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் போர்நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்ததாகக் கூறியுள்ளது. இது மிகைப்படுத்தப்பட்டதாக இருப்பதாக கூறி உள்ளது. பாகிஸ்தான் இந்தத் திட்டத்தை ஈரானுக்கு அனுப்பிய பிறகு பிரஸ் டிவியின் இந்த அறிக்கை வந்துள்ளது. ‘‘ஈரான் எப்போது போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறதோ, அதன் சொந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும்போதோ அதை முடிவுக்குக் கொண்டுவரும்,\\” என்று அந்த அதிகாரி கூறியதாக பிரஸ் டிவி தெரிவித்துள்ளது. அதுவரை மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தனது கடுமையான தாக்குதல்களை தொடரும் என்று அந்த அதிகாரி கூறினார்.

இப்போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு தர வேண்டும், ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் உரிமையில் தலையிடக் கூடாது என்பது ஈரானின் முக்கிய நிபந்தனைகளாக உள்ளன. முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில், ‘‘பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். ஈரானும் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள்’’ என்றார். சில சர்வதேச ஊடகங்களும், அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை விரைவில் பாகிஸ்தானில் நடத்தப்படலாம் என செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குழப்பத்திற்கு நடுவே ஈரான் மீது இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை தொடங்கியிருப்பதாக நேற்று அறிவித்தது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள முக்கிய மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் மின் உற்பத்தி நிலையத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் கூறி உள்ளது. மேலும், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் நேற்றும் வழக்கம் போல் டிரோன் தாக்குதல் நடத்தியது. குவைத் விமான நிலையத்தில் பெரும் தீ விபத்தும் ஏற்பட்டது.

* சவுதி இளவரசரிடம் விளக்கிய பாக். பிரதமர்
மேற்கு ஆசியா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்வது தொடர்பான தகவல்கள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் நேற்று விளக்கம் அளித்துள்ளார். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பாகிஸ்தானின் ராஜதந்திர முயற்சிகள் குறித்து சவுதி இளவரசரிடம் விளக்கியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

* அணு ஆயுதம் வேண்டாம் ஈரான் ஒப்புக் கொண்டது
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஓவல் அலுவலகத்தில் பேசிய போது, ‘‘ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்கப் போவதில்லை என ஒப்புக் கொண்டு விட்டது. அவர்கள் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாகவும் அவர்கள் மிகவும் அற்புதமான பரிசு ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். அந்த பரிசு கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள பிரமாண்டமான பரிசு. அது என்ன என்பதை இப்போது சொல்லப்போவதில்லை. நாங்கள் சரியான நபர்களிடம் பேசி வருகிறோம். இந்த போரில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். இந்த போர் வெல்லப்பட்டு விட்டது’’ என கூறினார்.

* தனக்கு தானே பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா: ஈரான் ராணுவம் கிண்டல்
ஈரான் ராணுவ செய்தி தொடர்பாளர் இப்ராகிம் சோல்பகாரி கூறுகையில், ‘‘அமெரிக்கா தனது போரில் தோல்வியடைந்து வருகிறது. இதனால், தனக்கு தானே பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்குச் அமெரிக்கா சென்றுவிட்டது போலும். பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் என்று கூறி அமெரிக்கா தோல்வியை மறைக்க வேண்டாம்,” என்றார்.

* கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா
ஒருபுறம் பேச்சுவார்த்தை நடப்பதாக அதிபர் டிரம்ப் கூறும் நிலையில், மறுபுறம் அமெரிக்கா கூடுதல் படைகளை மத்திய கிழக்கிற்கு அனுப்பி வருகிறது. 82வது விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த குறைந்தது 1000 வீரர்கள் அடுத்த சில நாட்களில் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட இருப்பதாக 3 அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 2 பிரிவுகளை சேர்ந்த கடற்படையினரை அனுப்பும் பணியில் பென்டகன் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 5,000 கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். ஏற்கனவே வளைகுடா பிராந்தியத்தில் 50 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உள்ளனர். அடுத்தகட்ட திட்டத்தை தயாரிப்பதற்கு கால அவகாசத்தை எடுத்துக் கொள்வதற்காகவே பேச்சுவார்த்தை நடப்பதாக கூறுவது அதிபர் டிரம்பின் தந்திரமாகக்கூட இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

* அமெரிக்க வீரர்கள் பலியாவார்கள்
மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருவது குறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தனது எக்ஸ் பதிவில், ‘‘இப்பகுதியில் அமெரிக்காவின் அனைத்து நகர்வுகளையும், குறிப்பாக படை குவிப்புகளையும் நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். உயர்மட்ட தலைவர்களின் தவறுகளை, களத்தில் நிற்கும் சாதாரண வீரர்களின் தியாகத்தாலோ, முயற்சியாலோ சரி செய்து விட முடியாது. மாறாக அவர்கள் நெதன்யாகுவின் மாயைகளுக்கு பலியாவார்கள். எங்கள் மண்ணை பாதுகாப்பதில் எங்களுக்கு இருக்கும் உறுதியை சோதித்து பார்க்காதீர்கள்’’ என எச்சரித்துள்ளார்.

Tags : West Asia ,United States ,Iran ,Dubai ,Israel ,Strait of Hormuz ,US ,
× RELATED போரை முடிவுக்குக் கொண்டுவருவது...