நன்றி குங்குமம் தோழி
மிக இளம் வயதில் மாரடைப்பு மரணங்கள் நேருவதில்லை. மாறாக அரிதாக இதய செயல் முடக்க மரணங்கள் நேருகின்றன. முதலில் மாரடைப்பு ( MYOCARDIAL INFARCTION) மற்றும் இதய முடக்கம் (CARDIAC ARREST) ஆகியவற்றுக்கான வித்தியாசத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
மாரடைப்பு (MYOCARDIAL INFARCTION) என்பது இதயத்தின் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் தமனிகளில் திடீர் அடைப்பு ஏற்படுவது அதனால் இதயத்தின் துடிப்பு நின்று மரணம் ஏற்படும். இதய முடக்கம் / செயலிழப்பு என்பது CARDIAC ARREST இதில் ரத்த நாள அடைப்பு மரணத்திற்கு காரணமன்று. மாறாக இதயத்தின் நார்மலான துடிப்புக்கான இயங்குவியல் மற்றும் அதற்கு சக்தி தரும் மின்சார சர்க்யூட்டில் ஏற்படும் பிரச்னையில் நிகழ்வதாகும்.
பொதுவாக மாரடைப்பு / இதய ரத்த நாள அடைப்பு போன்றவை மிக இளம் வயதில் மிக மிக அரிதான ஒன்று. எனினும் இளம் வயதில் திடீரென ஏற்படும் மரணங்களுக்கு இதய முடக்கம்/ செயலிழப்பு ஏற்பட்டு மரணமடையவே வாய்ப்பு அதிகம். இதை SUDDEN DEATH IN YOUNG ADULTS (இளம் வயதில் ஏற்படும் திடீர் மரணம்) என்கிறோம். இதற்கு SUDDEN CARDIAC ARREST (திடீர் இதய செயல் முடக்கம் ) காரணமாக இருக்கலாம். ‘திடீர் இதய முடக்கம்’ என்பது திடீரென்று இதயத்தின் துடிக்கும் விதத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து அதனால் இதயத்தின் செயல்தன்மை பாதிக்கப்படுவது அல்லது நிற்பது என்று கொள்ளலாம்.
மிக இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு நிகழ்வதற்கு காரணங்கள்:
இதயத்தின் துடிக்கும் விதத்தில் பிரச்னைகள் இருந்தால் இதயத்தால் முழு செயல்திறனுடன் ரத்தத்தை உடல் முழுமைக்கும் உந்தித் தள்ள இயலாது. இதன் விளைவாக இதயத்தின் தசைகள் அதிக வேலைப்பளுவுக்கு உள்ளாகி தடிமனாகும். இதை HYPERTROPHIC CARDIOMYOPATHY என்கிறோம். இன்னும் சிலருக்கு இதயத்தின் துடிப்பு தறிகெட்டு இருக்கும். சராசரியாக துடிக்கும் விகிதத்தை விட அதிகமாகத் துடிக்கும். இது அந்த இதயத்தில் உள்ளார்ந்த துடிக்கும் திறனில் ( CARDIAC RHYTHM) பாதிப்பை உண்டாக்கும்.
Congenital Long QT Syndrome பிறவியிலேயே ஏற்படும் இதய துடிப்பில் வரும் பிரச்சனை இது அல்லது ACQUIRED LONG QT SYNDROME இது இதயத்தில் ஏற்பட்டுள்ள வேறு பிரச்சனைகளால் அல்லது உட்கொள்ளும் சில மருந்துகளால் ஏற்படலாம்.
BRUGADA SYNDROME ( ப்ருகடா சிண்ட்ரோம்), WOLFE PARKINSON WHITE SYNDROME (வுல்ஃப் பார்கின்சன் வொய்ட் சிண்ட்ரோம்) ARVC ( ARRHYTHMOGENIC RIGHT VENTRICULAR CARDIOMYOPATHY) மார்பு பகுதியில் ஏற்படும் பலத்த காயம் ( BLUNT CHEST INJURY) திடீரென விளையாடும் போதோ அல்லது சாலை விபத்திலோ மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்படும் போது இதயம் திடீரென செயலிழந்து விடும் இதை COMMOTIO CORDIS (கொமோசியோ கார்டிஸ்) என்கிறோம்.
இவையன்றி இதயத்தின் அறைகளில் ஓட்டைகள் / இதயத்தின் அறைகளில் தேவையற்ற இணைப்புகள் போன்ற பிறவியிலேயே தோன்றும் பிரச்சனைகளாலும் இதய செயலிழப்பு ஏற்படலாம்.
கண்டுகொள்ளாமல் விடும் தீவிர ரத்த சோகை நிலையும் இதய செயலிழப்பை ஏற்படுத்தலாம். இதைப்படித்த உடன் மேற்சொன்ன பிரச்சனைகள் நமது பிள்ளைக்கும் இருக்குமோ என்ற அச்சம் தேவையில்லை காரணம் மேற்சொன்ன பிரச்சனைகள் மிக மிக அரிதானவை. ஆயினும் சில இதயம் சார்ந்த அறிகுறிகள் குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருப்பது இது போன்ற இதயம் சார்ந்த பிரச்சனைகளை கண்டுகொண்டு முறையான சிகிச்சை எடுத்து மரணத்தை தவிர்க்க உதவும்.
– விளையாடும் போதோ ஓடும் போதோ உடற்பயிற்சி செய்யும் போதோ தலைசுற்றினால் அல்லது தலை சுற்றி கீழே விழுந்திருந்தால் ( SYNCOPE) அது இதயத் துடிப்பு சார்ந்த செயல்திறன் பிரச்னையாக இருக்கலாம்.
– மூச்சுத்திணறல்( SHORTNESS OF BREATH) , அதிலும் உடற்பயிற்சி செய்யும் போது அதிகமான மூச்சுத் திணறல் ஏற்படுவது.
கவனிக்க – உடல் பருமன் இருக்கும் சிறார்கள் / ஆஸ்துமா போன்ற நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் இருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் வரலாம். எனினும் மருத்துவரை சந்திக்கும் போது மெய்யான காரணம் தெரியவரும்.
– குடும்பத்தில் ஏற்கனவே இள வயது மரணங்கள் ஏற்பட்டிருக்கிறதா ? அப்படி ஏற்பட்டிருந்தால் இன்னும் அதிக கவனம் தேவை.
இதயம் சார்ந்த பிரச்னைகள் முன்னமே கண்டறியப்பட்டால் அதீத உடல் பயிற்சியை தவிர்க்கலாம். இதயத்தின் துடிக்கும் விதத்தை சீராக வைத்திருக்கும் மாத்திரைகள் மருந்துகளை முறையாக உட்கொண்டு வரலாம். இதயத்தின் அறைகளில் ஓட்டை / அறைகளுக்கிடையே ஒழுங்கற்ற இணைப்புகள் இருந்தால் அவற்றை காலத்தே அறுவை சிகிச்சை செய்து சீர் செய்யலாம்.
இதயத்தின் துடிக்கும் விதத்தில் பிரச்னை இருப்பவர்களுக்கு இதயத்திலேயே பொருத்தப்படும் தானியங்கி இதய துடிப்பு சீராக்கி ( MPLANTABLE CARDIOVERTER DEFIBRILLATOR) கருவியை பொருத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை இதயம் துடிக்கும் விதத்தில் மாறுபாடு/ஒழுங்கின்மை தோன்றினால் அதை இந்தக் கருவி தாமாகக் கண்டறிந்து இதயத்துடிப்பை சீர் செய்து விடும். குழந்தைப் பருவத்தில் இருந்து குழந்தைகள் நல மருத்துவர் / குடும்ப நல மருத்துவரிடம் முறையாக குழந்தைகளையும் சிறுவர் சிறுமியரையும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் பழக்கம் இருப்பவர்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர் இது போன்ற பிரச்சனைகளை உடனடியாகக் கண்டறிந்துவிடுவார்.
இது போகவும் மேற்சொன்ன அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகி பிரச்சனை எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து கொண்டு இதயத்தின் செயல்திறனில் பிரச்சனை கண்டறியப்பட்டால் அதற்கென பிரத்யேகமாக பயின்ற இதய நோய் சிறப்பு நிபுணர்களிடம் மேல்பரிந்துரை பெற்று சிகிச்சை பெற்று வருவது நல்லது.
தொகுப்பு: பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா
