நன்றி குங்குமம் டாக்டர்
ஒரு 50 வயது பெண்மணி இடது கண்ணில் வலி என்று வந்தார்கள். தூங்கி எழுந்தவுடன், ஒரு நிமிடம் மட்டும் இரண்டு இரண்டாக தெரிந்தது என்று தொடங்கி தனது 19 வயதிலிருந்து தைராய்டு, நீரிழிவு நோய் என பல வித வியாதிகளுக்கு ஒரு 20 மாத்திரைகளை உட்கொண்டு வருவதாக சொன்னார்கள். பொறுமையாக எல்லாவற்றையும் பரிசோதித்தேன். பின்பு, அவர்களுக்கு இடது கண்ணில் என்ன இருந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தனது உடல் நலம் குறித்து தொடர்ந்த படபடப்பும்,அதீத பயமும் சிலருக்கு ஏற்படுகிறது.மருத்துவரிடம் சென்று எல்லாம் சரியாக இருந்தாலும் ஏதோ ஒரு சிறு தவறு இருப்பதாகவே மனது நம்பும் தொந்தரவு தான் நோய் கவலைக் கோளாறு. (Illness anxiety disorder)சாதாரணமாக படி ஏறி வந்தால் ஓரிரு நிமிடங்கள் மூச்சு வாங்குவது, காலை எழுந்ததும் கண்ணில் அழுக்கு சேர்ந்து பார்வை ஓரிரண்டு நிமிடங்கள் மங்கலாக தெரிவது, அதிக கூட்ட நெரிச்சல் இருக்கும் இடத்திற்கு சென்று வந்தால் வேர்த்து விடுவது, நன்றாக சாப்பிட்டால் வரும் வயிறு நிறைந்த உணர்வு ஆகிய தினம் தினம் நடக்கும் சாதாரண உடல் இயங்கியல் கூட இவர்களை பயமுறுத்தும்.
இதற்கான காரணம் பலவாக இருந்தாலும் ஓரளவுக்கு முக்கியமான காரணங்கள் இவை:
1.சாதாரண உடல் இயக்கங்கள் மிகவும் அசௌகரியமாக தெரியும். இவை மீது கவனம் அதிகம் செலுத்துவார்கள்.
2.இவர்கள் வளர்ந்த குடும்பத்தில் பெற்றோரோ மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களோ அவர்களுக்கு இருந்த அதிக தொந்தரவு கொடுக்காத, சாதாரண நோயின் மீது அளவுக்கதிகமான கவலை கொண்டிருந்ததை பார்த்து வளர்ந்திருக்கலாம்.
3.இவர்களுக்கே சிறு பிள்ளையாக இருந்த போது ஏதேனும் சீரியசான நோய்க்கு மருத்துவம் பார்த்து அதனால் இந்த மனநிலை தோன்றியிருக்கலாம்.
4. ஏற்கனவே பதற்ற நோய் இருந்தால், இந்த நோய் கவலைப் பதற்றமும் கூடவே சேர்ந்து கொள்ளலாம்.
5.எல்லா நோய்களை குறித்தும், எல்லா இணையதளங்களிலும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பதால், இந்த தொந்தரவுக்கு உள்ளாக்கும் ரிஸ்க் அதிகரிக்கிறது.
இது ஒரு லட்சம் பேரில் 100 பேருக்காவது இருக்கிறது. பெரும்பாலும் டீன் ஏஜ் களிலே தொடங்கி வயதாக ஆக ஆக, இவர்களின் கவலை அதிகரிக்கிறது. பலவித ரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன்கள் எடுத்து ரிப்போர்ட் நெகடிவ் என்று வரும்போது இன்னும் ஆற்றாமை கொள்கிறார்கள். நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் ஒன்றும் இல்லை என்று கூறும் மருத்துவர்கள் மீது அதிருப்தி கொள்கிறார்கள்.
இன்னொரு மருத்துவரை உடனே அணுகவேண்டும் என்று அவசரம் கொள்கிறார்கள். ஒரு சிறிய பிரச்னை தான் ரெண்டு நாளில் சரியாகிவிடும் என்றால் முகத்தை தொங்க போட்டு விடுகிறார்கள். பெரும்பாலும் வேலை இல்லாமல் அல்லது வேலை செய்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள்.
இவர்களில் இரண்டு வகைகள் இருக்கிறார்கள்.
முதல் வகை மருத்துவமனைகளையும் மருத்துவர்களையும் சென்று பார்த்து, பரிசோதனைகளும் சிகிச்சையும் செய்யுங்கள் கேட்பவர்கள். இது தேவையில்லாத மருத்துவத்திற்கு வழிவகுக்கிறது. இரண்டாவது வகை மருத்துவமனைக்கு சென்றால் ஏதேனும் தொந்தரவு இருக்கிறது என்று சொல்லி விடுவார்களோ,வயிற்று எரிச்சலுக்கு சென்று குடல் கேன்சர் என்று முடிவு வந்தால்? என பயந்து மருத்துவமே நாடாமல் இருப்பார்கள்.
இந்தக் கோளாறு கண்டுபிடிப்பது என்பது சற்றே அதிக கவனம் கோருவது. உடலில் நோய் இல்லை,’எல்லாம் உங்கள் தலைக்குள் தான் இருக்கிறது’ என்று கடிந்து கொள்ளாமல் மென்மையாக அணுக வேண்டும். உடல் நோய்கள் எதுவும் இல்லை என்ற பட்சத்தில் இந்த உடல் கவலை கோளாறு இருக்கலாம் என்று யூகித்து ,அதை உறுதிப்படுத்திய பின்பு இவர்கள் கேட்கும் தேவையற்ற பரிசோதனைகளை எழுதி தருவதை மருத்துவர்கள் தவிர்க்கலாம். மனநல ஆலோசனை தேவைப்படுகிறது என்பது பொறுமையாக மற்றும் கட்டாயமாக சொல்ல வேண்டும்.
Cognitive behaviour therapy மற்றும் மருந்துகள் கொண்டு, இந்த அச்சத்தை முழுமையாக குணப்படுத்திக் கொள்ளலாம்.இந்தப் பெண்மணிக்கு இருந்தது சமைக்கும் போது ஏதோ வந்து கண்ணில் விழுந்து கருவிழி படலத்தில் ஏற்பட்ட சிறு கீறல் மட்டுமே.இங்கு கவனமாக பார்க்க வேண்டிய விஷயம் இவர்களுக்கு இருக்கும் சிறு தொந்தரவுகளை பெரிதாக்கி நினைத்துக் கொள்வார்கள்.மற்றொரு கோளாறான somatoform disorders இருந்தால் சிலர் அதிகமான வயிறு வலி அல்லது தலைவலி என்று சொல்லுவார்கள். இவை,மனதில் இருக்கும் தொந்தரவால் உடலில் தோன்றும் தீவிர அறிகுறிகள். அனைத்திற்கும் தீர்வு உண்டு எனவே மனதையும் உடலையும் கவனமாக கையாண்டு பாதுகாப்போம்.
தொகுப்பு: கண் மருத்துவர் சரயு காயத்திரி
