×

செர்விகல் ரேடிகுலோபதி பயனுள்ள பிசியோதெரப்பி சிகிச்சைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

வலியை வெல்வோம்!

‘சயாடிக்கா’ என்ற சொல் நமக்கு மிகவும் பரிச்சயமானது. முதுகெலும்பின் கீழ்ப்பகுதியில் (லம்பார் region) டிஸ்க் சிதைவு அல்லது நரம்பு அழுத்தத்தால் ஏற்படும் கடுமையான வலி, இடுப்பு வழியாக கால் வரை பரவும் நிலையை நாம் பலரிடமும் கேட்டிருப்போம், படித்திருப்போம். இது sciatica என்று அழைக்கப்படுகிறது – lumbar radiculopathy-யின் பொதுவான வடிவம்.

ஆனால், அதே போன்ற ஒரு நிலை கழுத்துப் பகுதியில் (cervical spine) ஏற்படும்போது என்ன ஆகும்? கழுத்து வலி, கழுத்தெலும்புகள் அல்லது டிஸ்க் பாதிப்பு, விபத்து அல்லது degenerative மாற்றங்கள் காரணமாக மேல் கை (upper limb) பகுதியில் peripheral nerve injuries அல்லது nerve root compression ஏற்படலாம். இது cervical radiculopathy என்று அழைக்கப்படுகிறது. இதனால் கை, முன்கை, மணிக்கட்டு, விரல்களில் வலி, உணர்விழப்பு, தசை பலவீனம் போன்றவை ஏற்படும். இருப்பினும், sciatica-யைப் போலவே பரவலாக பேசப்படாத இந்த cervical radiculopathy மற்றும் அதனால் ஏற்படும் மேல் மூட்டுகளின் புறநரம்பு பாதிப்புகள் (upper limb peripheral nerve injuries) பற்றி பலரும் விரிவாக அறிந்திருக்க மாட்டார்கள்.

குறிப்பாக, brachial plexus எனப்படும் கழுத்துப் பகுதியின் நரம்புத் தொகுப்பிலிருந்து உருவாகும் மிக முக்கியமான மூன்று நரம்புகளான மீடியன் (median), அல்னார் (ulnar) மற்றும் ரேடியல் (radial) நரம்புகளின் பாதிப்புகள் எப்படி ஏற்படுகின்றன, அவற்றின் அறிகுறிகள், உடற்கூற்றியல் நோய்க்கூறுகள் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை முறைகள் பற்றி இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. கழுத்து முதல் கை விரல் வரை உணர்வு (sensation) மற்றும் இயக்கம் (motor function) ஆகியவற்றை கட்டுப்படுத்தும் இந்த brachial plexus-இன் முக்கிய கிளைகளான மூன்று நரம்புகள் – median, ulnar, radial – பாதிக்கப்படும்போது, தினசரி செயல்பாடுகள் (writing, gripping, lifting போன்றவை) பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இவை entrapment neuropathies (carpal tunnel, cubital tunnel போன்றவை), trauma, fractures அல்லது cervical root compression-ஆல் ஏற்படலாம்.

இந்தக் கட்டுரையில், sciatica-யைப் போன்ற cervical radiculopathy-யின் அடிப்படை முதல், brachial plexus-இன் மூன்று முக்கிய நரம்புகளின் பாதிப்புகள் (median, ulnar, radial nerve palsies), அவற்றின் உடற்செயலியல், நோய்க் கூறுகள் மற்றும் பயனுள்ள பிசியோதெரபி சிகிச்சை முறைகள் வரை விரிவாகப் பார்ப்போம். இது உங்கள் கழுத்து வலி அல்லது கை பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும், சரியான மறுவாழ்வு (rehabilitation) அணுகுமுறையைத் தேர்வு செய்யவும் உதவும்.

இந்தத் தொடரின் கட்டுரை தொகுப்பில் முன்பே கழுத்து நரம்பு அழுத்தம் பற்றி பார்த்து உள்ளோம் ஆனாலும் இக்கட்டுரையில் மீண்டும் நினைவூட்டுகிறேன்.நம்மில் பலருக்கு கழுத்து வலி வரும். சிலருக்கு அந்த வலி தோள், கை, விரல்கள் வரை பரவும். விரல்களில் மரத்துப்போன உணர்வு, கை பலவீனமாக இருப்பது போல் தோன்றும். இதைத்தான் கழுத்து நரம்பு அழுத்தம் (செர்விகல் ரேடிகுலோபதி) என்று சொல்கிறோம்.

கழுத்து நரம்பு அழுத்தம் எப்படி வருகிறது?

நம்முடைய கழுத்தில் 7 எலும்புகள் உள்ளன (C1 முதல் C7). இவற்றுக்கு நடுவில் டிஸ்க் என்ற மென்மையான பகுதி இருக்கும். வயது ஆக ஆக, டிஸ்க் உலர்ந்து போகும். சில சமயம் டிஸ்க் வெளியே தள்ளி வரும் (டிஸ்க் சரியாக இல்லாமல் இருப்பது). அல்லது எலும்புகளில் சிறு முள்ளுகள் (osteophytes) வளரும். இவை நரம்பு வேர்களை அழுத்தும்.அழுத்தம் வந்தால்:

*கழுத்து வலி
*தோள், கைக்கு வலி பரவுதல்
*விரல்களில் மரத்துப்போன உணர்வு
*கை பலவீனம் (எ.கா. பொருள் பிடிக்க முடியாமல் இருப்பது)
*சிலருக்கு ரிஃப்ளெக்ஸ் குறையும்

இதைத்தான் கழுத்து நரம்பு அழுத்தம் அல்லது செர்விகல் ரேடிகுலோபதி என்று சொல்கிறோம்.செர்விகல் ரேடிகுலோபதி (Cervical Radiculopathy) என்பது கழுத்துப் பகுதியில் உள்ள முதுகெலும்பு நரம்பு வேர்கள் (cervical nerve roots) அழுத்தம் அல்லது எரிச்சல் ஏற்படுவதால் உண்டாகும் நோய் நிலை. இது கழுத்து வலி, கை மற்றும் விரல்களுக்கு பரவும் வலி (radicular pain), உணர்வு குறைவு (numbness/paraesthesia), தசை பலவீனம் (muscle weakness) மற்றும் சில சமயங்களில் ரிஃப்ளெக்ஸ் மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இதற்கு மாறாக, மீடியன் (Median), அல்னார் (Ulnar) மற்றும் ரேடியல் (Radial) நரம்பு பக்கவாதங்கள் peripheral nerve palsies ஆகும். இவை brachial plexus-இலிருந்து வெளியேறிய பிறகு கை, முன்கை, மணிக்கட்டு அல்லது விரல்களில் அழுத்தம் (entrapment) அல்லது காயம் (trauma) காரணமாக ஏற்படுகின்றன. கைக்கு செல்லும் முக்கிய மூன்று நரம்புகள்

கழுத்திலிருந்து தொடங்கி கைக்கு செல்லும் நரம்புகள் மூன்று முக்கியமானவை:

1.மீடியன் நரம்பு (Median nerve):

*கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரலின் பாதி பகுதிக்கு உணர்வு கொடுக்கும்.

*கட்டைவிரலை மற்ற விரல்களோடு சேர்த்து பிடிக்கும் வேலையை செய்யும்.

2.அல்னார் நரம்பு (Ulnar nerve) :

*சிறுவிரல் மற்றும் மோதிரவிரலின் பாதி பகுதிக்கு உணர்வு.

*கை விரல்களை பரப்புவது, இறுக்குவது போன்ற சிறிய தசை வேலைகளை செய்யும்.

3.ரேடியல் நரம்பு (Radial nerve):

*மணிக்கட்டையும் ,விரல்களையும் நிமிர வைக்கும் (மணிக்கட்டு தூக்குதல்). கை மேல் பகுதியில் உணர்வு கொடுக்கும். இந்த மூன்று நரம்புகளும் கழுத்து அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். அல்லது கை, முழங்கை, மணிக்கட்டு பகுதியில் தனியாக அழுத்தம் வந்தாலும் பாதிப்பு வரும்.

ஒவ்வொரு நரம்பு பாதிப்பையும் எவ்வாறு தெரிந்து கொள்வது?

மீடியன் நரம்பு பிரச்சினை

*கட்டைவிரல் பலவீனம்

*பொத்தான் அணிவது, பேனா பிடிப்பது சிரமம்

*கட்டைவிரல், ஆள்காட்டி, நடுவிரலில் மரத்துப்போன உணர்வு

*இரவில் அதிக வலி (கார்பல் டனல் சிண்ட்ரோம்)

அல்னார் நரம்பு பிரச்சினை

*சிறுவிரல், மோதிரவிரலில் உணர்வு குறைவு

*விரல்கள் “கிளா” போல் வளைந்து இருக்கும் (claw hand)

*கை விரல்களை பரப்ப முடியாது

*முழங்கையில் நீண்ட நேரம் வளைத்து வைத்தால் அதிக வலி

ரேடியல் நரம்பு பிரச்னை

*மணிக்கட்டு தொங்கிவிடும் (wrist drop)

*விரல்களை நிமிர்த்த முடியாது

*கை மேல் பகுதியில் உணர்வு குறைவு

*பொருள் தூக்க முடியாது

பிசியோதெரபி எப்படி உதவும்?

ரெடிகுலோபதி உள்ள பெரும்பாலானவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை.

சரியான பிசியோதெரபி மூலம் 80-90% பேர் நன்றாக குணமாகிறார்கள்.

கழுத்து நரம்பு அழுத்தத்துக்கு:

1.தலை சற்று முன்னால் கொண்டு வரும் பயிற்சி (chin tuck)

2கழுத்து தசைகளை இறுக்கி வைத்தல் (isometric exercise)

3.கழுத்தை மெதுவாக இழுத்தல் (traction)

4.தோள்பகுதி தசைகளை வலுப்படுத்துதல்

5.வலிக்கு TENS, அல்ட்ராசவுண்ட்.

மீடியன் நரம்பு பிரச்சினைக்கு:

*இரவில் மணிக்கட்டை நேராக வைக்கும் ஸ்பிளிண்ட்

*நரம்பு நீட்டும் பயிற்சி (nerve gliding)

*கட்டைவிரல் வலிமை பயிற்சி (பந்து பிடித்தல், பொத்தான் அழுத்துதல்)

அல்னார் நரம்பு பிரச்சினைக்கு:

*முழங்கையை நிமிர வைக்கும் ஸ்பிளிண்ட்
*உல்னார் நரம்பு gliding பயிற்சி
*விரல்களை பரப்பும் ரப்பர் பேண்ட் பயிற்சி

ரேடியல் நரம்பு பிரச்சினைக்கு:

*மணிக்கட்டை தூக்கி வைக்கும் ஸ்பிளிண்ட்
*ரேடியல் நரம்பு gliding
*மணிக்கட்டு நீட்டும் பயிற்சி
*மின்சாரம் மூலம் தசை தூண்டுதல் (NMES)

கழுத்து வலி வந்தால் உடனே புறக்கணிக்காதீர்கள். அது கை வரை பரவினால், நரம்பு அழுத்தம் இருக்கலாம். ஆரம்பத்திலேயே பிசியோதெரபிஸ்ட்டை சந்தித்து சரியான பயிற்சி, ஸ்பிளிண்ட், posture திருத்தம் செய்தால் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். நரம்பு மெதுவாகவே குணமாகும். எனவே பொறுமையாக, தொடர்ந்து பயிற்சி செய்வது மிக முக்கியம். அறுவைசிகிச்சை செய்தாலும் அதற்கு பிறகும் தொடர்ந்து மறுவாழ்வு பயிற்சிகள் செய்ய வேண்டும்.

தொகுப்பு: இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி

Tags : SAFFRON ,
× RELATED விஜய் தேவரகொண்டா ஃபிட்னெஸ்!