×

ஹைட்ரோதெரப்பி அற்புதங்கள்…

நன்றி குங்குமம் டாக்டர்

நரம்பு & எலும்பு சிகிச்சைகள்!

ஹைட்ரோதெரப்பியின் முக்கிய வகைகள்

1.வாட்ஸ்யு (Watsu): நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் ஒரு வகை மசாஜ் சிகிச்சை.

2.கான்ட்ராஸ்ட் பாத் (Contrast Bath): மாற்றி மாற்றி சுடுநீரிலும் குளிர்ந்த நீரிலும் கை, கால்களை வைப்பதன் மூலம் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு வீக்கம் குறையும்.

3.அண்டர்வாட்டர் ட்ரெட்மில் (Underwater Treadmill): அறுவை சிகிச்சைக்குப் பின் எலும்புகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் நடப்பதற்கு இது உதவும்.

நரம்பு மண்டல சிகிச்சைகள்

நரம்பு பாதிப்புகள் உள்ளவர்களுக்கு தரையில் உடற்பயிற்சி செய்வது பல நேரங்களில் கடினமாகவும் சில நேரங்களில் சவாலாகவும் இருக்கலாம். ஆனால் ஹைட்ரோதெரபி மூலம் தண்ணீரில் செய்யப்படும் பயிற்சிகள் பாதுகாப்பாகவும் எளிதாகவும் இருக்கும். குறிப்பாக பக்கவாதம் காரணமாக தசைத்திறன் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு, நீரில் உடலின் எடை குறைவாக உணரப்படுவதால் கை மற்றும் கால்களை சுலபமாக அசைக்க முடிகிறது. இதன் மூலம் மூளை மற்றும் தசைகளுக்கிடையிலான தொடர்பு (neuromuscular coordination) மெதுவாக மீண்டும் உருவாக உதவுகிறது.

மேலும் முதுகெலும்பு காயம் உள்ள நோயாளிகளும் நீரில் பாதுகாப்பாக பயிற்சி செய்ய முடியும். தசை வலிமை குறைந்திருந்தாலும் தண்ணீரின் ஆதரவு காரணமாக அவர்கள் சுதந்திரமாக இயக்கங்களைப் பயிற்சி செய்ய முடியும். அதேபோல் நரம்பு வலி (Neuralgia) உள்ளவர்களுக்கு வெதுவெதுப்பான நீரில் செய்யப்படும் சிகிச்சை நரம்புகளின் மீது மென்மையான அழுத்தத்தை ஏற்படுத்தி நாள்பட்ட வலியை (chronic pain) குறைக்க உதவுகிறது. தொடர்ந்து செய்யப்படும் நீர் பயிற்சிகள் உடலின் சமநிலை, இயக்கக் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி தினசரி செயல்பாடுகளை எளிதாக்குகின்றன.

பக்கவாதம் (Stroke Rehab)

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலின் ஒரு பக்கம் செயலிழந்து இருக்கலாம். தண்ணீரில் உடலை விழாமல் தாங்கும் சக்தி இருப்பதால், அவர்கள் பயமின்றி நடைப்பயிற்சியை (Gait training) மேற்கொள்ளலாம். இது மூளையில் புதிய நரம்புப் பாதைகளை உருவாக்க (Neuroplasticity) உதவுகிறது.

பார்கின்சன் நோய் (Parkinson’s Disease)

பார்கின்சன் உள்ளவர்களுக்கு உடல் நடுக்கம் மற்றும் நடக்கும்போது சமநிலை இழப்பு ஏற்படும். தண்ணீரின் அடர்த்தி அவர்கள் வேகமாக விழுவதைத் தடுப்பதுடன், தசைகளின் இறுக்கத்தை (Rigidity) குறைத்து மென்மையான இயக்கத்திற்கு வழிவகுக்கிறது.

சியாட்டிகா மற்றும் தண்டுவட பாதிப்புகள் (Sciatica & Spinal Cord Injury)

தண்டுவட நரம்புகளில் ஏற்படும் அழுத்தத்தை (Compression) தண்ணீர் குறைக்கிறது. நீருக்கு அடியில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் டிஸ்க் (Disc) பகுதிகளில் உள்ள அழுத்தத்தை நீக்கி நரம்பு வலியைத் தணிக்கிறது.

உடல் எடையைக் குறைப்பதில் (Weight Loss) ஹைட்ரோதெரபி

உடல் எடையைக் குறைக்க ஒரு நவீன மற்றும் பயனுள்ள வழியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ஜிம்மிற்குச் சென்று கடினமான பயிற்சிகளைச் செய்ய முடியாதவர்களுக்கு இது மிகச்சிறந்த மாற்றாகும்.

1.தண்ணீரின் எதிர்ப்பு விசை (Water Resistance)

தண்ணீரின் அடர்த்தி காற்றை விட அதிகம். எனவே, நீங்கள் தண்ணீருக்குள் கைகளை அசைக்கும்போது அல்லது நடக்கும்போது, சாதாரண தரைப்பகுதியை விட 12 முதல் 15 மடங்கு அதிக எதிர்ப்பு விசை கிடைக்கிறது.

*இது உங்கள் தசைகளுக்கு அதிக வேலை கொடுத்து, குறுகிய நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.

2. வளர்சிதை மாற்றம் அதிகரிப்பு (Boosts Metabolism)

*வெப்பநிலை மாற்றம்: வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் உடற்பயிற்சி செய்யும்போது, உடல் தனது வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

*இந்தச் செயல்முறை உங்கள் மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகரித்து, நீங்கள் ஓய்வாக இருக்கும்போது கூட கலோரிகளை எரிக்கச் செய்கிறது.

மூட்டு அழுத்தம் குறைதல் (Low Impact)

அதிக உடல் எடை கொண்டவர்கள் தரையில் ஓடும்போது அல்லது குதிக்கும்போது அவர்களின் முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டுகளில் அதிக அழுத்தம் ஏற்படும்.

*தண்ணீரில் நின்றால் உங்கள் உடல் எடை 90% குறைகிறது. இதனால் மூட்டு வலி பயமின்றி நீங்கள் கடினமான ஏரோபிக் பயிற்சிகளைச் செய்ய முடியும்.

வீக்கம் மற்றும் நச்சு நீக்கம் (Lymphatic Drainage)

தண்ணீரின் அழுத்தம் உடலில் உள்ள தேவையற்ற நீர்த்தேக்கத்தைக் (Water Retention) குறைக்கிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கி கொழுப்பு கரையும் வேகத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சனைகளுக்கு (Orthopedic conditions) ஹைட்ரோதெரபி

மூட்டு வலி அல்லது எலும்பு முறிவுக்குப் பிறகு தரையில் உடற்பயிற்சி செய்வது மூட்டுகளில் அதிக அழுத்தத்தை உண்டாக்கும், ஆனால் தண்ணீரில் அந்த அழுத்தம் இல்லாமல் விரைவாகக் குணமடைய முடியும்.

1.மூட்டுத் தேய்மானம் மற்றும் ஆர்த்தரைடிஸ் (Osteoarthritis & RA)ஆர்த்தரைடிஸ் உள்ளவர்களுக்கு மூட்டுகள் இறுக்கமாகவும் வலியுடனும் இருக்கும்.

*வலி நிவாரணம்: வெதுவெதுப்பான நீர் மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளைத் தளர்த்தி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது மூட்டு இறுக்கத்தைக் (Joint Stiffness) குறைக்கிறது.

*அசைவுத் திறன்: தண்ணீரில் உடல் எடை 90% குறைவதால், மூட்டுகளில் தேய்மானம் ஏற்படாமல் முழு வீச்சில் கை, கால்களை அசைக்க முடியும்.

2.எலும்பு முறிவு மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் (Post-Surgery Rehab)

எலும்பு முறிவு (Fracture) அல்லது மூட்டு மாற்று அறுவைசிகிச்சைக்குப் (Joint Replacement) பிறகு தசைகள் பலவீனமடையும்.

*ஆரம்பக்கால இயக்கம்: அறுவை சிகிச்சை முடிந்து தரையில் நடக்க முடியாதவர்கள் கூட, தண்ணீரில் பாதுகாப்பாக நடைப்பயிற்சியைத் தொடங்கலாம்.

*தசை வலிமை: தண்ணீரின் எதிர்ப்பு விசை (Resistance) ஒரு எடையைப் போலவே செயல்பட்டு, அறுவை சிகிச்சையால் பலவீனமான தசைகளை மீண்டும் வலுவாக்குகிறது.

3. முதுகுத்தண்டு மற்றும் டிஸ்க் பாதிப்புகள் (Spinal Issues)

தண்டுவடத்தில் டிஸ்க் விலகுதல் (Disc Prolapse) அல்லது கீழ் முதுகு வலி உள்ளவர்களுக்குத் தண்ணீர் சிகிச்சை ஒரு வரப்பிரசாதம்.

*அழுத்த நீக்கம் (Decompression): தண்ணீரில் மிதக்கும்போது தண்டுவட எலும்புகளுக்கு இடையே உள்ள அழுத்தம் குறைகிறது. இது நரம்புகள் அழுத்தப்படுவதைத் தடுத்து வலியை உடனடியாகக் குறைக்கிறது.

*முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (Precautions)

இந்தச் சிகிச்சையைத் தொடங்கும் முன் கீழ்க்கண்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்

*வெப்பநிலை கவனிப்பு: நீரின் வெப்பநிலை மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்கக்கூடாது. குறிப்பாக இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மிதமான வெப்பநிலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

*தோல் நோய்கள்: உடலில் ஏதேனும் திறந்த காயங்கள், தொற்று நோய்கள் அல்லது தோல் வியாதிகள் இருந்தால் தண்ணீரில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும். இது தொற்று பரவ வழிவகுக்கும்.

*கட்டுப்பாடற்ற வலிப்பு (Uncontrolled Epilepsy): வலிப்பு நோய் உள்ளவர்கள் தனிமையில் இச்சிகிச்சையைச் செய்யக்கூடாது. எப்போதும் ஒரு கண்காணிப்பாளர் அருகில் இருப்பது அவசியம்.

*உயர் ரத்த அழுத்தம்: கடுமையான உயர் ரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி வெதுவெதுப்பான நீர் சிகிச்சையை மேற்கொள்ளக் கூடாது.

*நீரிழிவு நோய் (Diabetes): நரம்பு பாதிப்பு உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு நீரின் வெப்பத்தை உணரும் திறன் குறைவாக இருக்கலாம். இதனால் தோல் சுட வாய்ப்புள்ளதால் நீரின் வெப்பத்தைச் சரிபார்ப்பது அவசியம்.

*சிறுநீரகக் கோளாறு: கடுமையான சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சைக்கு முன் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

பாதுகாப்பு குறிப்புகள்

1.நீரேற்றம் (Hydration): சிகிச்சைக்கு முன்பும் பின்பும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

2.பாதுகாப்பான நடைமுறை: நீரில் பயிற்சி செய்யும் போது உடல் சமநிலையை கவனித்து, வழுக்காமல் இருக்க மெதுவாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

3. நிபுணர் கண்காணிப்பு: முதல்முறை இப்பயிற்சியைச் செய்பவர்கள் தகுதியான பிசியோதெரபிஸ்ட் முன்னிலையில் செய்வது பாதுகாப்பானது.

தொகுப்பு: இயன்முறை மருத்துவர் நித்யா மூர்த்தி

Tags : Saffron Dr. Nerve & Bone ,
× RELATED திடீர் இதய முடக்கம்… அலெர்ட் ப்ளீஸ்