×

ஊழலற்ற ஆட்சி செய்வோம் என்கிறார் விஜய்: தவெகவில் பணம் தந்தால்தான் கட்சிப்பதவியே வழங்குகின்றனர்; தற்கொலைக்கு முயன்ற பெண் நிர்வாகியின் கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு

தவெகவில் மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக இருந்தவர் ஷர்மிளா. தற்போது சுற்றுச்சூழல் அணி நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவர், தவெக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி தன்னிடம் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதுடன், பதவியை பறித்துக் கொண்டதாகவும் கூறி, கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றார். தற்போது வரை மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இதுதொடர்பாக கட்சி தலைமையிடம் புகாரளித்தும், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக ஷர்மிளாவின் கணவரும், தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளராகவும் இருந்த பாலாஜி, நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் மனைவி மதுரை தெற்கு மாவட்ட மகளிரணி தலைவியாக இருந்தார். தற்போது இப்பதவிக்கு வேறொரு பெண்ணிடமிருந்து ஏராளமான பணத்தை பெற்றுக்கொண்டு நியமித்து இருக்கிறார் மாவட்ட செயலாளர் தங்கபாண்டி. இதேபோல எங்களிடம் பல முறை கட்சி வளர்ச்சி நிதி, நலத்திட்ட நிகழ்ச்சி நடத்துவதற்கு நிதி என பலமுறை ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.

மதுரை செல்லூரில் உள்ள மாவட்ட செயலாளர் கட்சி அலுவலகத்திற்கு ஷோபா செட், பிரிண்டர் உள்ளிட்டவைகள் நாங்கள் வாங்கி கொடுத்துள்ளோம். ஐடி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் அதன் மூலம் கட்சிக்கும் வளர்ச்சி ஏற்படும் என மாவட்ட செயலாளர் கூறியதால் நிலத்தை அடமானம் வைத்து ரூ.16 லட்சத்தை பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஐடி கம்பெனியில் முதலீடு செய்தோம். ஆனால் தற்போது வரையில் எவ்வித லாபமும் தொகையும் கொடுக்கவில்லை. இதனால் கடனாளியாக இருந்ததால் மன உளைச்சலில் தனது மனைவி ஷர்மிளா தற்கொலை முயற்சி செய்தார். பலமுறை கட்சி மேலிடத்திற்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கேட்டால் சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றவுடன் பணத்தை வட்டியுடன் ஒரு கோடியாக திருப்பி தருவதாக எங்களிடம் கூறுகின்றனர். அதுவரையில் எந்தவித புகார் தெரிவிக்க வேண்டாம் என மாவட்ட தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடமானத்தில் உள்ள நிலம் வட்டி கட்டாமல் மூழ்கிவிடும் என்பதற்காக பலமுறை பணத்தைக் திருப்பி கேட்டு முறையிட்டும் பணத்தை தராமல் இருக்கின்றனர். எங்களை போன்றே பல நிர்வாகிகளிடம் பல்வேறு விதத்தில் பல லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றி வருகிறார். ஊழலற்ற ஆட்சியை தருவதாக விஜய் கூறுகிறார். ஆனால் கட்சிக்குள் இருக்கும் மாவட்ட தலைமை நிர்வாகிகள் பணம் கொடுத்தால்தான் பதவி வழங்கப்படும் என்று பதவியை விற்பனை செய்து ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

Tags : Vijay ,Thavegavil ,Sharmila ,Madurai South District Women's Team ,Team ,Madurai South District ,Thangapandi ,
× RELATED அதிமுக – பாஜக கூட்டணியில்...