அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காலில் ஊர்ந்து வந்து ஆட்சியை பிடித்தவர், எதற்கும் உதவாதவர். அவருடன் கூட்டணி சேருவதற்கு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ளலாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். பின்னர் பாஜ மேலிடம், இருவரையும் அழைத்துபேசி ஒன்று சேர்த்தது. அதன்பிறகு டிடிவி தினகரன், ‘‘இது எங்களின் பங்காளி சண்டை, இனிமேல் ஓரணியாக இணைந்து செயல்படுவோம்’ என தெரிவித்தார். நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை அதிமுக, பாமக அன்புமணி, பாஜ, அமமுக கட்சிகள் கூட்டணி சேர்ந்து சந்திக்க உள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுகவுக்கு 11 தொகுதிகள் நேற்று முன்தினம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருப்பத்தூர் தொகுதி அதிமுகவுக்கு வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக திருப்பத்தூரை அமமுகவுக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து அமமுக வேட்பாளராக ஏஜிஎஸ். ஞானசேகரன், தேர்தல் பணியை தொடங்கியுள்ளார். திருப்பத்தூர் தொகுதியில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி இருக்கும் என அதிமுகவினர் எதிர்பார்த்தனர். இங்கு அதிமுக சார்பில் டாக்டர் திருப்பதி என்பவருக்குதான் சீட்டு கிடைக்கும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். மேலும் மாஜி அமைச்சர் கே.சி.வீரமணியும் அதிமுகவுக்குதான் இந்த தொகுதி என கட்சியினரிடம் தெரிவித்து இருந்தாராம்.
திருப்பத்தூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு வீரமணியின் ஆதரவாளர்கள் டி.டி.சங்கர், டி.டி.குமார், டாக்டர் திருப்பதி ஆகிய 3 பேரும் கேட்டு வந்தனர். ஆனால், அமமுகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 5 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வந்த தனக்குதான் சீட்டு கிடைக்கும் என டாக்டர் திருப்பதி இருந்து வந்தார். ஆனால் அமமுகவுக்கு ஒதுக்குவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து திருப்பத்தூரில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகம் எதிரே, நேற்று காலை கட்சியினர் திரண்டு மாஜி அமைச்சர் வீரமணிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கட்சி அலுவலகத்தின் உள்ளே ஏராளமானோர் திரண்டு, அங்கிருந்த டாக்டர் திருப்பதியிடம், ‘நீங்கள் ஏன் விட்டுக்ெகாடுத்தீர்கள், இதற்கு வீரமணிதான் காரணம், அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கவேண்டும், திருப்பத்தூர் தொகுதியை அதிமுகதான் மீட்கவேண்டும்’ எனக்கூறினர்.அப்போது அங்கிருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் திடீரென தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து மீட்டனர். எங்களுக்குள் பங்காளி சண்டை, நாங்கள் ஒற்றுமையாகிவிட்டோம் என எடப்பாடியும், டிடிவியும் கூறி வரும் நிலையில், அதிமுக நிர்வாகிகள், அமமுக கூட்டணியை ஏற்க மறுத்து தீக்குளிப்பு போராட்டம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமமுகவுக்கு சீட்டு ஒதுக்கினால் நாங்கள் யாரும் தேர்தல் பணி செய்யமாட்டோம் எனவும் அதிமுகவினர் உறுதிபட கூறி வருகின்றனர்.
