×

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: நான் சைக்கிள்ல போய் ஓட்டு கேட்கலாம்னு இருக்கேன்; சீமான் நக்கல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சோனியா(வேலூர்), திருக்குமரன்(காட்பாடி), ரவிக்குமார்(அணைக்கட்டு) ஆகியோரை ஆதரித்து வேலூர் மண்டி தெருவில் வேன் மூலம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ‘இந்த தேர்தலில் நீங்கள் வழக்கம்போல் வாக்கு செலுத்திவிட்டு கடந்து செல்லாமல், வரலாறு தந்த கடமையாக உணர்ந்து வாக்களிக்க வேண்டும். கூட்டணிக்கு வந்தால் பணம், துணை முதல்வர் பதவியும் தருவதாக கூறினார்கள். நாங்கள் செல்லவில்லை’ என்றார். பின்னர், நிருபர்களுக்கு சந்தித்தார்.

அப்போது, கொரோனாவை விட கடுமையான சூழ்நிலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என மோடி கூறியுள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான், ‘சூழ்நிலை தர போறது அவங்க தானே. இந்த தேர்தலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். என்ன சூழ்நிலை வருது நீங்க ஏற்றுக்கொண்ட பொருளாதார கொள்கை, தனியார்மயம், தாராள மயம், உலகம் மயத்தில் ஒவ்வொரு நாட்டை சார்ந்து இருந்தோம். அமெரிக்கா, ஈரான் மீது போரால், நமக்கு எரிகாற்று வரவில்லை. எரிகாற்று தற்சாற்பு அடைய வேண்டும் என்று சொன்னேன். பேரிடர் காலம் சிலிண்டர் இல்ல எரிபொருள் தட்டுப்பாடு. பெட்ரோல், டீசல் இல்லனா வண்டிகளை துடைத்து வைக்க வேண்டிய சூழல் வரும். சைக்கிளில் தான் போக வேண்டியது. மறுபடியும் நான் கூட சைக்கிளில் ஓட்டு கேட்க போகலாம்னு இருக்கிறேன்’’ என்றார்.

* ‘ராமதாசின் பிள்ளை நான்’
சீமான் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராமதாஸ் கட்சிகளால் தான் தனித்து விடப்பட்டாரே தவிர மக்களால் அல்ல. என்றைக்கும் மக்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள். மக்களுக்காக அவர் இருக்கிறார். நான் எல்லாம் அவருடைய பிள்ளை. அவர் இல்லாமல் எனக்கு இந்த உணர்வும், போராட்ட குணமும் வந்திருக்காது. 85 வயதில் தமிழை தேடி ஒரு தலைவன் இருக்கிறான். சமூக நீதியை பேச அவரை தாண்டி ஆள் இருக்கிறார்களா?. நான் இன்றைக்கு பேசுவது அவர் கற்றுக்கொடுத்தது தான். இந்த நாட்டில் வகுப்பு வாரியாக பிரதிநிதித்துவம் பேசுறது எங்க அய்யா தான். அப்பனால் முடியலனா மகன் செய்வேன். அவருடைய கனவை நான் நிறைவேற்றுவேன். அதற்காக தானே நான் அரசியலில் இருக்கிறேன். மொத்த கட்சி கூட்டணியை ஒத்த கட்சி மோதி வெல்லும்’ என்றார்.

* பிரசாரத்தில் விதிமீறல் நிர்வாகிகள் மீது வழக்கு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ராஜிவ்காந்தி சிலை அருகே நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்பாடுகள் நடந்தது. இதையொட்டி உரிய அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றாமல் தேசியநெடுஞ்சாலையில் கொடிகள் கட்டப்பட்டன. ஆம்பூர் எல்லையான அண்ணாநகர் துவங்கி பைபாஸ் சாலை ராஜிவ்காந்தி சிலை வரை இந்த கொடிகள் பாலத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. நடத்தை விதிமுறைகளை மீறி கொடிகளை கட்டிய நாதகவினர் மீது பறக்கும் படை அலுவலர், ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் நாதக கிழக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : Seeman ,Naam Tamilar Party ,Vellore Mandi Street ,Sonia ,Vellore ,Thirukumaran ,Katpadi ,Ravikumar ,Anaikattu ,Tamil Nadu Assembly ,
× RELATED அதிமுக – பாஜக கூட்டணியில்...