×

எனக்கு சீட் கொடுத்தா 3 தொகுதிக்கு செலவு செய்வேன்: முன்னாள் மந்திரி மகன் ஆஃபர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதி உள்ளது. இதில் முக்கியமாக பார்க்கப்படும் தொகுதி பாபநாசம். அந்த தொகுதியில் கடந்த 2006 முதல் 2016 வரை அதிமுக தான் வெற்றி பெற்று வந்தது. வேளாண்மை துறை அமைச்சராக இருந்த துரைகண்ணு, கடந்த 2020ல் இறந்தார். 2021ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் அந்த பகுதியை சேர்ந்த மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதனுக்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வி அடைந்தார். கடந்த 2021 தேர்தலில் முன்னாள் அமைச்சர் துரைகண்ணு மகன் துரை சண்முகபிரபு முயற்சி செய்தார். அப்போது அவருக்கு சீட் கொடுக்கவில்லை. 2026 தேர்தலில் போட்டியிடலாம் என தலைமை, அவரை சமாதானம் செய்தாக கூறப்படுகிறது. இந்த முறை கண்டிப்பாக எனக்கு தான் சீட் வேண்டும் என தலைமையிடம் அடம்பிடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

முன்னாள் அமைச்சர் மகன் என்பதால் அவர் தலைமையிடத்தில் நெருக்கமாக இருப்பதாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர். இந்த முறை பாபநாசம் தொகுதியில் எனக்கு சீட் கொடுத்தால் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட 3 தொகுதிக்கும் செலவு செய்ய தயாராக இருக்கிறேன் என கூறி தலைமையிடத்தில் காக்கா பிடித்து வருகிறாராம். கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதனும் மீண்டும் நான் தான் போட்டியிட உள்ளேன். எனது சமுகம் தான் இந்த பகுதியில் அதிகம் உள்ளது.

எனது சமூகத்தை சார்ந்தவர்கள் எனக்கு தான் ஓட்டு போடுவார்கள். அதனால் எனக்கு தான் இந்த முறையும் சீட் என கூறி வருகிறார். அதபோல் வடக்கு மாவட்ட தலைவர் ராம்குமாரும் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தொகுதியில் பெரிதாக இவரது மூவ் இல்லை என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். யாரு என்ன சொன்னாலும் பாபநாசம் தொகுதியை பொறுத்தவரை நான் தான் என அமமுக துணை பொது செயலாளர் ரெங்கசாமி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

* ஒரு தொகுதியும் சரிவரல.. தூங்கா நகருக்கு தாவும் நயினார்?
தேஜ கூட்டணியில் பாஜவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும் எந்தெந்த தொகுதிகள் என்பது இதுவரை வெளியிடப்படவில்லை. நெல்லை தொகுதியை பொறுத்தவரை தற்போதைய மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த 2001 முதல் போட்டியிட்டு வருகிறார். 2021ல் 5ம் முறையாக போட்டியிட்டு நயினார் நாகேந்திரன் வென்றார். பின்னர் சட்டமன்ற பாஜ தலைவராகவும், அதைத் தொடர்ந்து சமீபத்தில் மாநில பாஜ தலைவராகவும் நயினார் நாகேந்திரன் உயர்ந்தார்.

இந்நிலையில் வருகிற ஏப்.23ல் நடக்கும் தேர்தலில் நயினார் நாகேந்திரன் தொகுதி மாறுகிறார் என்ற பேச்சு கடந்த 6 மாதமாகவே நிலவி வந்தது. அது மட்டுமல்லாது அதிமுகவில் இருந்த போது நெல்லை தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் பாஜவிற்கு தாவிய பிறகும், தொகுதியை தர மறுக்கிறாரே, கடந்த 25 ஆண்டுகளாக இந்தத் தொகுதியை கையில் வைத்துள்ளாரே என உள்ளூர் அதிமுகவினர் பொறுமி வந்தனர். இதனால் இந்த முறை நமக்கு அதிமுகவினர் வேலை பார்ப்பார்களா என்ற கேள்வியும் நயினார் நாகேந்திரனுக்கு எழுந்தது.

ஆனால் இதை நயினார் நாகேந்திரன் தொடர்ந்து மறுத்து வந்தார். இதனால் அவர் சாத்தூர் தொகுதிக்கு மாறலாம் என அதிகம் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மதுரை தெற்கு தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே போல முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சிங்காநல்லூர் தொகுதியில் களம் காண்பார் எனவும் தெரியவந்துள்ளது. இதனால் நெல்லை தொகுதி அதிமுகவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

* கடலூர் விசிக கவுன்சிலர் புதுச்சேரியில் போட்டி
புதுச்சேரியில் திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள விசிகவுக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட கடலூர் மாநகராட்சி 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த செல்வ புஷ்பலதா, மனு தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: குடும்ப சூழ்நிலை மற்றும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் முழுமையாக குடியேறிய நான் கடந்த சில நாட்களுக்கு முன் எமது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன்.

எமது ராஜினாமா கடிதத்தை மேயர் சுந்தரி ராஜா ஒப்புக்கொண்டு ஏற்று கொண்ட போது, மேயர் என்னும் அக்காவை தங்கையாக ஆரத் தழுவி கண்கலங்கி அன்பை பரிமாறிக்கொண்டோம். என்றென்றும் எமது நெஞ்சில் குடியிருக்கும் எம்மோடு நான்கு வருட காலங்களாக தொடர்ந்து அன்பை பரிமாறிக் கொண்ட எமது வார்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். எட்டு வருட காலமாக நான் கட்சியில் வந்த காலம் முதல் இன்று வரை எம்மை பாதுகாத்து, அரவணைத்து, ஊக்கப்படுத்தி, கயவர்களிடம் விட்டுக் கொடுக்காத அன்பு தம்பிகள், அன்பு தோழமைகள், எமது கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tags : Thanjavur district ,Papanasam ,AIADMK ,Duraikannu ,
× RELATED அதிமுக – பாஜக கூட்டணியில்...