*மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என கூடலூர் மக்கள் கோரிக்கை
கூடலூர் : ரம்ஜான் பண்டிகை விடுமுறையையொட்டி ஊட்டிக்கு வந்த ஏராளமான சுற்றுலா வாகனங்கள் நேற்று மீண்டும் திரும்பி கேரளா மற்றும் கர்நாடகா சென்றதால் நகரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.ரம்ஜான் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கேரள மற்றும் கர்நாடகாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர்.
அதிக அளவில் கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் கடந்த நான்கு தினங்களாக ஊட்டிக்கு வந்துள்ளனர். நேற்றுடன் விடுமுறை முடிந்ததால் ஊட்டியில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் கூடலூர் வழியாக கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு திரும்பிச் சென்றன. இதனால் கூடலூர் நகரில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஊட்டியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் அரசு மற்றும் சுற்றுலா பேருந்துகள், வேன்கள் தவிர்த்து பெரும்பாலான கார்கள் மற்றும் சிறிய வாகனங்கள் நடுகூடலூர் பகுதியில் இருந்து தோட்டமூலா வழியாக மாற்றுப் பாதையில் மைசூர் சாலைக்கு திருப்பி விடப்பட்டன. கூடலூர் வழியாக மைசூர் செல்லும் சாலை இரவு 9 மணிக்கு மூடப்படுவதால் போலீசார் இந்த மாற்று ஏற்பாடு செய்து வாகனங்கள் விரைவாக செல்ல வழி வகுத்தனர்.
கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் கூடலூர் நகர் வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து கள்ளிக்கோட்டை சாலை வழியாக சென்றன. பழைய பேருந்து நிலையம் சிக்னல் பகுதியில் இருந்து ஊட்டி சாலையில் நீண்ட தூரத்திற்கு கார்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இரவு பத்து மணி வரையிலும் இந்த போக்குவரத்து நெரிசல் நீடிப்பதால், கூடலூர் நகரில் உள்ளூர் பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஆட்டோக்களில் செல்லும் உள்ளூர் பயணிகள் நீண்ட நேரம் சாலையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உள்ளூர் மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில், கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் வெளிமாநில வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
