ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு சித்த மருத்துவர், பேராசிரியை வீட்டு கதவை உடைத்து 8.5 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள எஸ்.எம்.டி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ மன்னன் (42). இவர், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 11 மணியளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலை நிமித்தமாக வெளியே சென்றுவிட்டார். இரவு 10 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 6 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளைபோனது தெரிய வந்தது. இது குறித்து சுந்தர்ராஜ மன்னன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் டிஎஸ்பி பாலசுந்தரம், நகர் இன்ஸ்பெக்டர் ராஜதுரை ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கொள்ளையில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நியூஹவுசிங் போர்டு பகுதியில் தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர் வசித்து வருகிறார்.
இவரது வீட்டிலும் நேற்று கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த சுமார் 2.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த வீட்டில் டிஎஸ்பி பாலசுந்தரம் மற்றும் மல்லி போலீசார் சம்பவ பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
