×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மிக உயரமான மலைப்பகுதியில் அமைந்துள்ள வனத்துறை பங்களாவுக்கு சோலார் மின்வசதி: தமிழக அரசு சார்பில் ரூ.6 லட்சம் செலவில் அமைப்பு

 

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மிக உயரமான இடத்தில் இருக்கும் வனத்துறை பங்களாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 லட்சம் செலவில் சோலார் மின்வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லி-மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் உள்ள இந்த வனப்பகுதியில் முதலியார் ஊத்து என்னும் இடத்தில், 125 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் சிறிய குடியிருப்பு கட்டப்பட்டது.

இதனை முதலியார் ஊத்து பங்களா என அழைக்கின்றனர். மலைப்பகுதியில் சோதனைக்கு செல்லும் வனத்துறை ஊழியர்கள் இந்த பங்களாவில் தங்குவது வழக்கம். செண்பகத் தோப்பு வழியாக வனத்துறையினர் அல்லது மலைவாழ் மக்கள் சென்றால் 4 அல்லது 5 மணி நேரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள முதலியார் ஊத்து பங்களாவிற்கு சென்றுவிடுவார்கள். புதிதாக செல்பவர்கள் காலையில் கிளம்பினால், மாலையில் தான் செல்ல முடியும். அடர்த்தியான வனப்பகுதியை கடந்து இந்த பகுதிக்கு செல்ல வேண்டும்.

அந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் குதிரைகள் மூலம் இந்த பகுதிக்கு செல்வார்கள் என கூறப்படுகிறது. மலை உச்சியில் அடர்த்தியான வனப்பகுதியில் பங்களா அமைந்திருப்பதால், வனவிலங்குகள் வராமல் இருக்க, பங்களாவைச் சுற்றி அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பங்களா வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சோதனைக்கு செல்லும்போதும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்குச் செல்லும்போதும் இந்த பங்களாவில் வனத்துறையினர் தங்குவர். இதேபோல, வத்திராயிருப்பு, புதுப்பட்டி பகுதியில் இருந்து வரும் வனத்துறையினரும் இந்த பங்களாவில் தங்குவர்.

இங்கு மின்சார வசதி இல்லாததால், வனத்துறையினர் இரவில் தீ மூட்டிக் கொண்டும், மெழுகுதிரி விளக்குகளை பயன்படுத்திக் கொண்டும் தங்குவது வழக்கம். இந்த நிலையில் பங்களாவுக்கு சோலார் மூலம் மின்வசதி செய்து கொடுக்க வேண்டும் என வனத்துறையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று சுமார் ரூ.6 லட்சம் செலவில் சோலார் மின்வசதி மூலம் பங்களாவில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அருகே உள்ள சுனையில் இருந்து பங்களாவிற்கு தண்ணீர் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக கழிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘முதலியார் ஊத்து பங்களாவில் இரவில் தங்கும்போது, வனவிலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தீ மூட்டியும், மெழுகுவர்த்தி விளக்குகளையும் பயன்படுத்தியும் வந்தோம். அனால், தற்போது தமிழக அரசின் ஏற்பாட்டின்படி, முதன்முறையாக சோலார் மின்வசதி மூலம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பங்களாவில் உள்ள அனைத்து அறைகளிலும் மின்விளக்குகள் எரிகின்றன. குடிநீர் மற்றும் கழிப்பறை வசத் செய்யப்பட்டுள்ளது. இதனால், அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்’ என்றார்.

Tags : Power Facility ,Bungalow ,Srivilliputur ,Government of Tamil Nadu ,Tamil Nadu government ,Tamil Nadu Forest ,Virudhunagar District ,
× RELATED விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று...