நாகர்கோவில்: காஸ் தட்டுப்பாடு காரணமாக கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இரவு நேர டிபன் சென்டர்கள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். ஈரான், அமெரிக்கா போரால் உலகம் முழுவதும் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டிலும் காஸ் தட்டுப்பாடு பிரச்சினையால் ஓட்டல்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு வர்த்தக சிலிண்டர் விற்பனையாகிறது. காஸ் சிலிண்டரின் தட்டுப்பாடு, குமரி மாவட்டத்திலும் தற்போது அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன.
கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில், உணவு வகைகள் குறைப்பு, டீ, காபி, வடை மற்றும் உணவு பண்டங்கள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. சாதாரண ஒட்டல்களில் கூட தோசை வகைகள் ரூ.50 ல் இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. காஸ் தட்டுப்பாடு பிரச்சினையால் காலை மற்றும் இரவு நேர டிபன் சென்டர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. டீ கடைகளின் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் 300க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், டீ கடைகள் உள்ளன. கேஸ் தட்டுப்பாடு பிரச்சினைக்கு பிறக ஏராளமான டீ கடைகள், சிறு, சிறு ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக டிபன் சென்டர்கள் செயல்பட வில்லை.
இரவு நேர டீ கடைகளும் இயங்க வில்லை. இதனால் இரவில் வரும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று காலையில் இருந்து கன்னியாகுமரியில் அதிக கூட்டம் இருந்தது. இரவிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால் இரவு நேர ஓட்டல்கள், தள்ளுவண்டி டிபன் சென்டர்கள் இல்லாமல் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இன்று (சனி), நாளை (ஞாயிறு) அதிகளவில் கூட்டம் இருக்கும். கேஸ் பிரச்சினையால் ஓட்டல்கள், டிபன் சென்டர்களை திறக்க முடியாத நிலையில் அதன் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஒரு சில ஓட்டல்கள் வெளி மார்க்கெட்டில் இருந்து அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறார்கள். நாகர்கோவிலில் முக்கிய ஓட்டல்கள் தவிர ஏராளமான டீபன் சென்டர்கள் மூடப்பட்டுள்ளன. வடசேரி பஸ் நிலையத்தை சுற்றி இரவு நேர தள்ளுவண்டி கடைகள் இருக்கும். கேஸ் பிரச்சினையால் அவை மூடப்பட்டு உள்ளன. இதே போல் வீட்டு உபயோக சிலிண்டர் சப்ளையும் குறைந்துள்ளது. இதனால் புக்கிங் செய்து ஒரு வாரம் வரை ஆகியும் பலருக்கு சிலிண்டர் வர வில்லை. மாற்று சிலிண்டர் இல்லாமல் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
