×

சசிகலா குறித்து கேள்வி எழுப்பியதால் நிருபரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏ மகன்: ‘‘தம்பி கவனமாக போ’’ என எச்சரிக்கை

 

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறு கிடையாது. கலாச்சாரம், பண்பாட்டை மாற்றாமல் எம்ஜிஆர் படங்கள் வந்தது. அவர் அதை மாற்றவில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள். அதை தவறு சொல்ல முடியாது. ஆனால் கொண்ட கொள்கையை முறைப்படுத்தி தன்னை வடிவமைத்து கொண்டு ஆளுமைத்திறன் கொண்டு அரசியல் செய்ய வேண்டும். கொள்கைகளை முறைப்படுத்தி மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். எம்ஜிஆரை யாருடனும் ஒப்பிட முடியாது. கூட்டணி தொடர்பாக, எடப்பாடியின் நோக்கம் இதுதான். அதிமுக தலைமையில் தனிப்பட்ட முறையில் ஆட்சி இருக்கும். அதற்கு கூட்டணி என்றைக்கும் உறுதுணையாக இருக்கும். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக எடப்பாடி தான் முடிவெடுப்பார். எங்களை அடிமை கட்சி என்று எந்த அடிப்படையில் சொல்கின்றனர்? இதுவரையில் எந்த உரிமையை விட்டுக் கொடுத்துள்ளோம்.

தொகுதி பங்கீடுகள் முடிந்திருக்கும். விரைவில் அறிவிப்பு வெளியாகும். சசிகலா மற்றும் பாமக கூட்டணி அமைந்ததால் 5 முனை போட்டி என்பதில்லை. 2 முனை போட்டிதான். அதிமுக – திமுக இடையே தான் போட்டி. சசிகலாவை நாங்கள் போட்டியாக கருதவில்லை. அவர்களை மதிப்பிற்குரியவர்களாக வைத்திருந்தோம். அவர்கள் எங்களுக்கு ஒரு சதவீதம் அளவிற்கு கூட போட்டியே கிடையாது.இவ்வாறு கூறினார். சசிகலா குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிருபரைப் பார்த்து, அருகில் இருந்த ராஜன் செல்லப்பாவின் மகனும், அதிமுக ஐடி விங்க் நிர்வாகியுமான ராஜ்சத்யன், ‘‘தம்பி கவனமாக போ’’ என்று எச்சரிக்கும் விதத்தில் பேசியது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

 

Tags : AIADMK ,MLA ,Sasikala ,Madurai ,Thiruparankundram ,Rajansellappa ,MGR ,
× RELATED சமையல் காஸ் தட்டுப்பாடு தீவிரமாகிறது;...