- நெல்லை மண்டல தீயணைப்புத் துறை
- துணை இயக்குநர்
- சரவணபாபு
- சென்னை
- ஊழல் தடுப்புத் துறை
- திருநெல்வேலி மண்டல தீயணைப்புத் துறை
- செந்தில்குமார்
சென்னை: திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குநர் சரவணபாபு மற்றும் தீயணைப்பாளர் செந்தில்குமார் மீதான லஞ்ச வழக்கு குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கையால் உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை இயக்குநர் சரவணபாபு மிகவும் துணிச்சலாக தனது சம்பளம் பெறும் வங்கி கணக்கிலேயே நேரடியாக பல லட்சங்களை லஞ்சமாக பெற்றுள்ளார். துணை இயக்குநர் சரவணபாபு தீ உரிமங்களில் லஞ்சம் பெறுவதற்காக தனது துறையில் பணிபுரியும் அலுவலர்கள், தீயணைப்பாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் வங்கி கணக்குகளுக்கு தீ உரிமம் பெறும் நிறுவனங்களிடமிருந்து லஞ்ச பணத்தினை அவர்களது வங்கி கணக்குகளில் பெற்று பின்பு தன்னுடைய வங்கி கணக்கு மற்றும் தனது தாயார், மனைவி வங்கி கணக்குகளுக்கு சட்டவிரோதமாக பெற்றுள்ளார். மேலும் மாதாமாதம் தனக்கு கீழ் பணிபுரியும் அலுவலர்களிடமிருந்து மாதாந்திர மாமூல் பணம் மற்றும் அதிக தொகையுடைய தீ உரிமங்களுக்கான லஞ்சப் பணத்தினை அந்த நிறுவனதாரர்களின் வங்கி கணக்குகளில் இருந்து இவரது வசூல் ஏஜென்டான தீயணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி ராமலெட்சுமி வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பெற்றும் பின்பு தனது மற்றும் தன்னுடைய உறவினர் வங்கி கணக்குகளுக்கும் சரவணபாபு பல லட்சங்களை லஞ்சமாக பெற்றுள்ளார்.
இப்படி முறைகேடாக பெற்ற லஞ்ச பணத்தின் மூலமாக வாங்கிய தங்க நகைகளையும் தனக்கு நெருங்கிய தீயணைப்பு ஊழியர்களின் பெயரில் நகை கடன் வைத்து அந்த பணத்தினையும் அவர்களது வங்கி கணக்கில் இருந்து தனது வங்கி கணக்கிற்கு ரகசியமாக மாற்றம் செய்துள்ளது திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில் ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு தாக்கல் செய்யப்பட்டதால் நீதிபதி மனித உயிர்களை பாதுகாப்பதில் நேரடி தொடர்புடைய துறை என்பதால் தீ பாதுகாப்பு விதிமுறைகளில் விதிமீறலுக்கு தகுந்தாற்போல் லஞ்சம் பெற்று பொதுமக்களின் உயிர் பாதுகாப்புகளை கேலி கூத்தாக்குவது மிகவும் ஆபத்தானது என்பதால் லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கை அடிப்படையில் துணை இயக்குநர் சரவணபாபு மற்றும் செந்தில்குமார் ஆகியோரின் வங்கி கணக்கு மற்றும் அவர்கள் பெயரிலும் உறவினர் பெயர்களிலும் வாங்கி குவித்துள்ள அசையா சொத்துகளின் விவரங்களை உடனடியாக பத்திரப்பதிவு துறை மூலம் பெற்று விசாரிக்க வேண்டும்.
மேலும் சரவணபாபுவால் ஆய்வு செய்யப்பட்ட கட்டிடங்களின் விதிமீறல்களை கண்டறியும் வகையில் தீயணைப்புத்துறையின் தீ பாதுகாப்பு ஆய்வு விதிகளையும் தீயணைப்புத் துறையிடம் இருந்து பெற்று விசாரிக்கவும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால், துணை இயக்குநர் சரவணபாபு தனக்கு லஞ்சம் கொடுத்த தனியார் நிறுவனங்களையும் லஞ்சம் வாங்கிக் கொடுத்த தீயணைப்புத்துறை ஊழியர்களையும் ரகசியமாக மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீயணைப்புத்துறைக்கு துணை இயக்குநர் சரவணபாபுவை பணியிட மாற்றம் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிக்கை அனுப்பியும் இவர் தன் செல்வாக்கினால் இடமாற்றம் செய்ய விடாமல் தடுத்தும், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையை திசை திருப்பும் விதமாக இவரது வசூல் ஏஜென்டான செந்தில்குமாரின் மூலமாக சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றக்கோரி வழக்கு விசாரணையை காலதாமதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கருதுகின்றனர்.
