×

அமமுக வேட்பாளர்கள் இரட்டை இலையில் நிற்க எடப்பாடி கோரிக்கை எதிரொலி அதிமுக-பாஜ கூட்டணியில் மீண்டும் குழப்பம்: டெல்லியில் டிடிவி.தினகரனுடன் அமித்ஷா பஞ்சாயத்து

 

சென்னை: அதிமுக கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் அமமுக போட்டியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்ததால், டெல்லியில் டிடிவி.தினகரனுடன் அமித்ஷா பஞ்சாயத்து நடத்தினார். இதனால் கூட்டணி உடன்பாடு ஏற்படுவது தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. அதேபோல அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுகவை பொறுத்தவரை கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. மேலும் இந்த வாரத்திற்குள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில் அதிமுகவில் இன்னும் தொகுதி பங்கீடு என்பது தொடங்கியபாடில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுக-பாஜ கூட்டணி சென்னையில் நடந்த சந்திப்பின் மூலம் இரு கட்சி தலைவர்களாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நீண்ட மாதங்களாக நடந்து வருகிறது. இருப்பினும் கூடுதல் எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகளை பாஜ கேட்டு வருகிறது. அதாவது 50 தொகுதிகள் வரை கேட்பதாக முதலில் தகவல் வெளியானது. தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் இதுவரை பலகட்ட இருதரப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து இருந்தாலும் அதில் தொகுதி பங்கீடு நிறைவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது.

அதே நேரத்தில் தவெகவை கூட்டணிக்கு இழுப்பது தொடர்பாக பாஜ மேலிடம் பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தியது. அப்போது 90 தொகுதிகள், ஒரு துணை முதல்வர், 2 அமைச்சர் பதவிகளை தவெகவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பாஜ கோரிக்ைக விடுத்தது. ஆனால் எடப்பாடியோ, அதிமுக மட்டுமே ஆட்சி அமைக்கும். கூட்டணி அமைச்சரவை கிடையாது. தவெகவுக்கு 30 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று பிடிவாதமாக கூறிவிட்டார். இதனால் தவெக தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்து விட்டது. ஆனாலும், பாஜ மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்காமல் எடப்பாடி இழுத்தடித்து வந்தார். அதற்கு காரணம், தாமதமாக பேசினால், தாங்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டிய நிலை அவர்களுக்கு உருவாகும் என்று எடப்பாடி கருதினார். இதனால் கோபமான ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், இனி எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால், அவரது சென்னை பயணம் நேற்று முன்தினம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் எடப்பாடியை டெல்லிக்கு வரும்படி அமித்ஷா அழைத்தார்.

இதையடுத்து எடப்பாடி அவசரம் அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவின் அழைப்புக்காக காத்திருந்தார். அதன்பின்னர் அழைப்பு வந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாஜவுக்கு 31 தொகுதிகள், புதிய நீதிக்கட்சி, ஐஜேகேவுக்கு தலா 2 தொகுதிகள், பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படும். இவர்களில் பலரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அமமுகவுக்கு 9, பாமகவுக்கு 18, தமாகாவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிடும் என்று அமித்ஷா கூறினார். இதை எடப்பாடியும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வருவார். அவருடன் ஒப்பந்தம் போடுங்கள் என்று அமித்ஷா கூறியிருந்தார். அதையும் எடப்பாடி ஏற்றுக் கொண்டார். அப்போது, அமித்ஷாவிடம் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனால் மக்கள் மத்தியில் சின்னம் போய் சேராது. அதேநேரத்தில், அவர் கூடுதல் தொகுதிகளை கேட்கிறார். இதனால் ஒன்றோ அல்லது இரண்டோ கூடுதலாக கொடுக்கிறோம். அதை வாங்கிக் கொண்டு அதிமுக சின்னத்தில் போட்டியிடச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து, நேற்று சென்னை வருவதாக இருந்த பியூஸ் கோயலின் பயணம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் காலையில் டிடிவி.தினகரன் டெல்லி சென்றார். அமித்ஷாவை சந்திக்க காத்திருந்தார். பின்னர் நேற்றுதான் அவருக்கு அனுமதி கிடைத்தது. அமித்ஷாவின் வீட்டுக்கு 11.45 மணிக்கு சென்றார். அங்கு ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயலிடம் பேசினார். அப்போது அமித்ஷா சொன்ன தகவலை பியூஸ் கோயல் தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்தில் நிற்க முடியாது. தேமுதிக வராததால், எங்களுக்கு கூடுதல் இடம் வேண்டும். 9 சீட் தருவதாக கூறுகிறீர்கள். அதை 12 ஆக தாருங்கள் என்று கூறியுள்ளார்.

கடைசியில் 10 சீட் தர பியூஸ்கோயல் சம்மதித்துள்ளார். ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டி என்பதை ஏற்க முடியாது என்று கூறிவிட்டார். அதை தொடர்ந்து அமித்ஷாவை டிடிவி.தினகரன் சந்தித்துப் பேசினார். அதில் 11 தொகுதிகள் வரை அமமுகவுக்கு தர பியூஸ் கோயல் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பியூஸ் கோயல் ஓரிரு நாளில் சென்னை வருவார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே, அதிமுக- பாஜ இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. மேலும் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அதிமுக-பாஜ கூட்டணியைப் பொறுத்தவரை பாமகவுக்கு மட்டும் அதிமுக சீட் ஒதுக்கும். மற்ற கட்சிகளுக்கு பாஜதான் சீட் ஒதுக்கும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் பாஜ தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Tags : AIADMK ,Edappadi ,BJP ,Amit Shah ,TTV ,Dinakaran ,Delhi ,Chennai ,Edappadi Palaniswami ,AAMK ,Tamil Nadu… ,
× RELATED ரூபாய் மதிப்பு கடும் சரிவு, தொழில்துறை...