நெல்லை: எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி வழியாக வேளாங்கண்ணி செல்லும் வாராந்திர ரயிலின் நேரத்தை பயணிகளுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்க வேண்டும் என தென்மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். எர்ணாகுளத்தில் இருந்து வண்டி எண் 16361 எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் கோட்டயம், கொல்லம், தென்காசி, விருதுநகர், காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் புறப்பட்டு செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணிக்கு ஏற்கனவே சென்றது.
வண்டி எண் 16362 வேளாங்கண்ணி – எர்ணாகுளம் வாரம் இருமுறை ரயில் இதே மார்க்கத்தில் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு புதன் மற்றும் திங்கள்கிழமை மதியம் 11.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. தென்காசி வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று தமிழக கேரள எம்பிக்கள் மற்றும் பல்வேறு ரயில் பயணிகள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை, வாராந்திர ரயிலாக மாற்றி, அதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.
அதன்படி வண்டி எண் 16363 எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 11:50க்கு புறப்பட்டு, கோட்டயம், கொல்லம், புனலூர் வழியாக தென்காசிக்கு வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு வந்து சங்கரன்கோவில், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு மாலை 5.35 மணிக்கு சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் வண்டி எண் 16364 எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர ரயில் வேளாங்கண்ணியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வந்து, எர்ணாகுளத்தை மதியம் 11:55 மணிக்கு சென்றடைகிறது.
இந்த வாராந்திர ரயில் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டாரா, கொட்டாரகரை, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் ஒரு இரண்டு அடுக்கு குளிர்சாதன பெட்டி, 3 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி, 8 தூங்கும் வசதி பெட்டிகள், 5 பொதுப் பெட்டிகள், ஒரு ஜெனரேட்டர் கார் உள்ளிட்ட 18 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்முறையாக தென்காசி வழியாக இயங்கிய எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர ரயிலுக்கு காலை 7:30 மணிக்கு தென்காசி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைவர் பாண்டியராஜா, துணைத் தலைவர் சுரேஷ், துணைச் செயலாளர் தினேஷ் பாபு, நிர்வாகிகள் தங்கராஜ், ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய ரயில் குறித்து ரயில் பயணிகள் கூறுகையில் ‘‘ஏற்கனவே காலை 7 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறைக்கு பகல் நேர ரயில் ஒன்று இயங்கி வரும் நிலையில், அதற்குப் பின்னால் 15 நிமிட இடைவெளியில் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயிலும் இயக்கப்படுகிறது.
எனவே தென்காசியில் இருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி காலை 8 மணிக்கு மேல் தென்காசியில் இருந்து புறப்படும் வகையில் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும். எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரயில் நேரத்தை ஒரு மணி நேரம் தாமதம் செய்தால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். ரயில்வே நிர்வாகம் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
