×

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.14.83 லட்சம் பறிமுதல்

*800 காஸ் அடுப்புகள் சிக்கியது

கோவை : கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பறக்கும்படை வாகன சோதனையில் மொத்தம் ரூ.14.83 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கடந்த 16-ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 1 கோடியை 80 லட்சத்து 91 ஆயிரத்து 898 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில், தங்கம், வெள்ளி போன்றவை ரூ.44 லட்சம் மதிப்பிலும், பரிசுப்பொருட்கள் போன்றவை ரூ.29 லட்சம் மதிப்பிலும், மதுபாட்டில்கள் ரூ.51 ஆயிரம் மதிப்பிலும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவை உக்கடம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு பேரிடம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 900 ரூபாய் பறிமுதல் செய்தனர். அதே பகுதியில் சரக்கு வேனில் கொண்டு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 800 காஸ் ஸ்டவ் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த வியாபாரி உரிய ஆவணங்களை காண்பித்து வாங்கி கொள்வதாக தெரிவித்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட காஸ் ஸ்டவ் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சூலூர் அருகே நேற்று சூலூர் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் தலைமையில் குழுவினர் சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிபட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த திருப்பூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர் உரிய ஆவணம் இன்றி காரில் வைத்து இருந்த 51 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்து சூலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைப்படி 50 ஆயிரம் ரூபாய் வரை அனுமதிக்கப்படும் என்னும் நிலையில், ரூ.1,500 கூடுதலாக இருந்ததால் மொத்த பணமும் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கேரளாவில் இருந்து பாலக்காடு சேர்ந்த காய்கறி வியாபாரி வேனில் வந்தார்.

இந்த வேனை வேளாண்மை அலுவலர் சுகன்யா தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.50 லட்சத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.50 லட்சம் பணத்தை நிலைக்குழுவினர் பறிமுதல் செய்தனர். ரூ.7.62 லட்சம் ரொக்கம் பறிமுதல்: மேட்டுப் பாளையத்தில் அலுவலர் விக்னேஷ் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் நேற்று முன்தினம் இரவு பெத்திக்குட்டை பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது காரில் வந்த ஈரோடு தாசப்பகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(32) என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.74,650 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் அலுவலர் விஜயா தலைமையில் பறக்கும் படை குழுவினர் நேற்று முன்தினம் இரவு பிளிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த திண்டுக்கல் மாவட்டம் அம்பிளிக்கை சிந்தலப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (46) என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.63,520 பறிமுதல் செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் நேற்று அதிகாரி தேவிகா தலைமையில் நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே மோட்டார் பைக்கில் வந்த சின்னத்தொட்டிபாளையம் ரங்கா அவென்யூ பகுதியை சேர்ந்த பிரகாஷ் (39) என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.74,620 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அலுவலர் ஈஸ்வரி தலைமையிலான பறக்கும் படை குழுவினர் குளத்துபாளையம் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மேட்டுப்பாளையம் பாலப்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த சாமிநாதன்(37) என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.50 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம் ஓடந்துறை ரவுண்டானா பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் கமலபிரியா தலைமையில் குழுவினர் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் (36) என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தமாக நேற்று ஒரே நாளில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.7,62,790 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணத்தை பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் மேட்டுப்பாளையம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, தேர்தல் பிரிவு தனி துணை வட்டாட்சியர் பாலமுருகன்,தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சங்கர்லால் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பறக்கும்படை வாகன சோதனையில் மொத்தம் ரூ.14.83 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Coimbatore district ,Coimbatore ,Coimbatore district… ,
× RELATED சமையல் காஸ் தட்டுப்பாடு தீவிரமாகிறது;...