சென்னை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான தமிழ்நாட்டை சேர்ந்த லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், கிரிக்கெட் வர்ணனையில் நிலவும் நிறப் பாகுபாடு குறித்து எழுப்பியுள்ள புகார்கள் விளையாட்டு உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக பிசிசிஐயின் வர்ணனையாளராகப் பணியாற்றி வந்த லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், தற்போது அந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணத்தை அறிய விரும்பிய ரசிகர்களுக்கு, அவர் அளித்த பதில் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், தான் கருப்பாக இருப்பதாலேயே கடந்த 23 ஆண்டுகளாக திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, போட்டிகளில் டாஸ் போடும் நிகழ்வு, ஆடுகள ஆய்வு மற்றும் பரிசளிப்பு விழா போன்ற முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்க தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு வழங்க வேண்டிய வாய்ப்புகள் புதியவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நிறப் பாகுபாடு குறித்து சிவராமகிருஷ்ணன் பேசுவது இது முதல்முறையல்ல. தனது 17 வயதில் இந்திய அணியில் அறிமுகமான போது, மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அவர் கருப்பாக இருந்த காரணத்தாலேயே உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்ட கசப்பான அனுபவத்தையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், விளையாடும் காலங்களில் வட இந்தியாவில் இன ரீதியான அவதூறுகளையும் சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது, ‘‘ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். நான் கருப்பாக இருப்பதாலேயே புறக்கணிக்கப்பட்டேன்” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். பிசிசிஐ அமைப்பில் உள்ள சில தனிப்பட்ட நபர்களே இதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த வீரர் மற்றும் வர்ணனையாளர் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கிரிக்கெட் வாரியம் தரப்பிலிருந்து என்ன பதில் வரும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
