சென்னை: கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவத்தையடுத்து த.வெ.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து எக்ஸ் தளத்தில், இலங்கை, நேபாளத்தைப் போல் புரட்சி ஏற்படும் என்று பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது வன்முறையை தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் போராட்டங்களில் இறங்கக் கூடும் என்று எச்சரிக்கும் வகையில் மட்டுமே இந்த கருத்து அமைந்துள்ளது. வன்முறையையோ, வெறுப்பையோ தூண்டும் வகையில் இல்லை எனக் கூறி 2025ஆம் ஆண்டு நவம்பரில் ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி புகார்தாரரான எல்.ஐ.சி. ஏஜெண்ட் சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனு விசாரணைக்கு உகந்தது தான் எனக் கூறி மனுவை எண்ணிட்டு, பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
