×

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்; நவாஸ்கனி எம்பியிடம் விசாரணை தொடங்கியது: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

சென்னை: வருமானத்தை மறைத்தது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனிக்கு எதிராக விசாரணை தொடங்கியுள்ளதாக வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மக்களவை தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினரான நவாஸ்கனி, 2019 மற்றும் 2024ம் ஆண்டும் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அவர் வருமானத்தை மறைத்து உள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வருமானத்தை மறைத்தது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில், வருமான வரித்துறை, தன் வசம் இருந்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடங்கியுள்ளது. இதுகுறித்து நவாஸ்கனிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்எல்.சுந்தரேசன் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் நவாஸ்கனி எம்பி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை ஏற்று விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Income Tax Department ,High Court ,Navaskani ,Chennai ,Madras High Court ,Ramanathapuram ,Indian Union Muslim League ,Lok Sabha ,
× RELATED கரூர் சம்பவத்தில் வன்முறையை தூண்டும்...