சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நீடிக்கும். இன்று முதல் 24ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெயில் மற்றும் வெப்பம் நீடித்து வருகிறது. இருப்பினும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருந்தாலும் ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்துள்ளது. இன்றும் அதேநிலை நீடிக்கும்.
இதற்கிடையே, மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். அதன் தொடர்ச்சியாக 24ம் தேதி வரையில் தமிழகம் புதுச்சேரியிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும். மேலும், 20ம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் அதிகபட்ச aவெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் படிப்படியாக குறையவும் வாய்ப்புள்ளது.
சென்னையில் வறண்ட வானிலை காரணமாக இன்று நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.
