சென்னை: அரசு ஊழியர்களுக்கு 3வது குழந்தை பிறப்புக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு விதிகளில் தமிழக அரசு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 2 குழந்தைகள் என்ற வரம்பை தளர்த்தி, 3வது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, 2 குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என விதிமுறைகள் இருந்தன. இதனை தொடர்ந்து பல அரசு ஊழியர்கள் இந்த விதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு, 3வது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், குழந்தைகளின் எண்ணிக்கைக்கு எந்த உச்சவரம்பும் இல்லை எனவும், மகப்பேறு நலன்களை முழுமையாக மறுப்பது சட்டத்திற்கு முரணானது என தெரிவித்திருந்தது. அதே நேரத்தில், 2 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பெண்களுக்கு 26 வாரங்கள் வரையும் மற்றும் 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்களுக்கு 12 வாரங்கள் வரையும் மகப்பேறு விடுப்பு வழங்கலாம் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு அடிப்படை விதிகளில் சில திருத்தம் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பெண்களுக்கு அதிகபட்சமாக 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். மேலும், முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தால், அடுத்த பிரசவத்திற்கும் 365 நாட்கள் விடுப்பு வழங்கப்படும். இதேபோல், 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்களுக்கு முழு ஊதியத்துடன் அதிகபட்சம் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பை பிரசவத்திற்கு முன் மற்றும் பிந்தைய காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
