×

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 4 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4 லட்சம் தேர்தல் பணியாளர்களை உள்ளடக்கிய பல்வேறு பங்குதாரர்களுக்கு விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், செலவின கண்காணிப்பு குழுக்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் தேர்தல் நடைமுறையில் முழுமையான பயிற்சி அளிக்கும் வகையில் இந்த பயிற்சி திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சி திட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக, முக்கிய பங்குதாரர்களின் திறன், அறிவு மற்றும் தயார்நிலை ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம் மூலம் மதிப்பீடுகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, முதற்கட்ட மாநில அளவிலான பயிற்சிகள் நடத்தப்பட்டது.

அதன்படி,

  • மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்துதல் குறித்து கடந்த 9, 10ம் தேதி பயிற்சி வழங்கப்பட்டது.
  •  தேர்தல் நடத்தும் அதிகாரிகள்/ உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்துதல் குறித்து கடந்த 3ம் தேதி, 4ம் தேதி பயிற்சி வழங்கப்பட்டது.
  •  தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப பயன்பாடு குறித்து கடந்த 6ம் தேதி பயிற்சி வழங்கப்பட்டது.
  • மாநில அளவிலான முதன்மை பயிற்சியாளர்களுக்கு 24.2.2026, 25.2.2026 பயிற்சி வழங்கப்பட்டது.

அடுத்த கட்டமாக, மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் போன்ற மாவட்ட மற்றும் கள அளவிலான தேர்தல் செயல்பாட்டாளர்களுக்கு பயிற்சிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட அளவிலான பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் தற்போதைய அறிவுறுத்தல்களின்படி, அவர்களின் நடைமுறை அறிவை வலுப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் 6,803 மண்டல அதிகாரிகள், 75,032 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 2,25,096 வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட சுமார் 4 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நிலைகளிலும் உள்ள தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் முறையாக பயிற்சி பெற்று, தேர்தலை சுதந்திரமான, நியாயமான மற்றும் திறமையான முறையில் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்தி கொள்வதை உறுதி செய்வதே இந்த பயிற்சி திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Electoral Officer ,Archana Patnaik ,Tamil Nadu Assembly general ,
× RELATED தமிழகத்தில் வறண்ட வானிலை 24ம் தேதி வரை லேசான மழைக்கும் வாய்ப்பு