×

பூக்கள் வாங்க குவிந்த மக்கள்

ஓசூர், மார்ச் 18: கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு மொழி மற்றும் மதம் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக தெலுங்கு, கன்னடம், உருது பேசும் மக்கள் பரவலாக உள்ளனர். தொழிற்சாலைகள் நிறைந்த ஓசூர் பகுதியில் அனைத்து மாநில மக்களும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் தீபாவளி, போகி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரமலான் உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளும் களை கட்டும். யுகாதி பண்டிகையை தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் வேப்பிலை-வெல்லம் சாப்பிட்டு வெகு விமரிசையாக கொண்டாடுவர். இதேபோல், ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடித்து வரும் இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட பிறை பார்ப்பதற்காக காத்திருக்கின்றனர். யுகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை அடுத்தடுத்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ள மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் குவிந்தனர். மல்லிகை கிலோ ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கனகாம்பரம் ரூ.800க்கும், சாமந்தி ரூ.200க்கும், ரெட் ரோஸ் ரூ.160க்கும், முல்லைப்பூ ரூ.500க்கும், செண்டு மல்லி ரூ.40க்கும், சம்பங்கி ரூ.160 வரையிலும் நல்ல விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து 3 நாட்களுக்கு இதே விலை நீடிக்கும், விலை உயர்வுக்கும் வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Hosur ,Krishnagiri district ,
× RELATED 2 இடங்களில் ரூ.44.7 லட்சம் பறிமுதல்