ஓசூர், மார்ச் 17: ஓசூரில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், மதிய வேளையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழக -கர்நாடக எல்லை பகுதியில் உள்ள ஓசூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,883 அடி உயரத்தில் உள்ளது. மேலும், கர்நாடக மாநிலத்தையொட்டி உள்ளதால், அங்கு நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஓசூரிலும் ஆண்டு முழுவதும் நிலவி வந்தது. நாளுக்கு நாள் சாலைகள் விரிவாக்கம் மற்றும் தொழிற்சாலைகள் அதிகரிப்பின் காரணமாக, மரங்கள் அடியோடு வெட்டி அழிக்கப்பட்டது. மேலும், கிரானைட் கற்களுக்காக மலைகளும் சுரண்டப்பட்டு மாயமானது. இதனால், ஓசூர் பகதியில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு குளிர் காலங்களில் கூட வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவது வாடிக்கையாக உள்ளது. ஓசூரை பொறுத்தவரை, சமீப காலமாக கோடைக்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக வழக்கத்தை விட வெயில் சுட்டெரித்து வருகிறது.
வெயில் வாட்டி வதைப்பதாலும், அனல் காற்று வீசி வருவதாலும் உஷ்ணம் தாங்க முடியாமல் வாகனங்களில் செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், ஓசூர் நகரின் முக்கிய சாலைகளான எம்ஜி சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, பழைய பெங்களூரு சாலை, சப்ரிஜிஸ்டர் சாலை, பாகலூர் சாலை மற்றும் தாலுகா அலுவலகம் செல்லும் சாலை, தர்கா மற்றும் பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. நண்பகல் வேளையில் வெறிச்சோடி காணப்படுகிறது. அவசியமான பணிகளுக்கு செல்வோர் மட்டுமே, வேறு வழியின்றி சுட்டெரிக்கும் வெயிலில் செல்கின்றனர். மேலும், தள்ளுவண்டி மற்றும் நடைப்பாதை கடை வைத்துள்ளவர்கள், பெரிய குடைகளை விரித்து வியாபாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தற்போதே வெயில் அதிகமாக இருப்பதால் சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் மேலும் கடுமையாக வெயில் சுட்டெரிக்குமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
