×

தவெகவுடன் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை

கிருஷ்ணகிரி, மார்ச் 18: தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேட்டியில் கூறினார். கிருஷ்ணகிரியில் நேற்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுகவை பொறுத்தவரை மிகவும் தெளிவாக இருக்கிறோம். எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பின்போது, தவெகவுடன் எந்தவிதமான கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தெளிவாக தெரிவித்துள்ளார். அதேபோல், தவெகவும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் விஜய் கூட்டணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியது, அவர்கள் நடிகர் மீது இருக்கும் பற்றால் இது போன்ற கருத்துகளை சொல்லியிருக்கலாம். அதையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

கட்சி தலைவர் என்ன சொல்கிறாரோ, அதுதான் எங்கள் வேதவாக்கு. அதனால், இதுவரை தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் ஒரு தனிப்பட்ட மனிதர். அவரைப்பற்றி விமர்சனம் தேவையில்லை. தானும், எடப்பாடி பழனிசாமியும் அப்பாயின்ட்மென்ட் செய்யப்பட்ட முதலமைச்சர்கள் என ஓபிஎஸ் கூறியதில், எந்த தவறும் இல்லை. அப்பாயின்ட்மென்ட் முதலமைச்சராக இருந்தாலும், அதிமுக தொண்டர்களை காக்கக்கூடிய ஒரு தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இவ்வாறு கே.பி.முனுசாமி எம்எல்ஏ கூறினார். அப்போது, அதிமுக மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார் எம்எல்ஏ, பாலகிருஷ்ணாரெட்டி, மாநில மகளிரணி துணை செயலாளர் பரிதா நவாப், பாமக மோகன்ராம், பாஜ கவியரசு, தமாகா ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Thaveka ,Krishnagiri ,AIADMK ,Deputy General Secretary ,K.P. Munusamy ,MLA ,AIADMK… ,
× RELATED 2 இடங்களில் ரூ.44.7 லட்சம் பறிமுதல்