×

என்எம்எம்எஸ் தேர்வில் 355 மாணவர்கள் தேர்வு

சேலம், மார்ச் 17: சேலம் மாவட்டத்தில் என்எம்எம்எஸ் தேர்வு எழுதிய 355 மாணவ, மாணவிகள் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை (என்எம்எம்எஸ்) தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆண்டிற்கு ரூ.12,000 என மொத்தம் ரூ.48 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி, நடப்பு 2025-2026ம் கல்வியாண்டிற்கான தேர்வு கடந்த ஜனவரி 10ம் தேதி நடந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை மாணவர்கள் 3,651 பேர், மாணவிகள் 5,241 பேர் என மொத்தம் 8,892 பேர் இத்தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 44 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தேர்வு நடந்தது.

இதில் 8,752 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தேர்வெழுதினர். இதனிடையே தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியான நிலையில், உதவித்தொகைக்கு தகுதிவாய்ந்த மாணவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தை சேர்ந்த 355 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஜலகண்டாபுரம் அரசுப்பள்ளி மாணவிகள் 24 பேர் தேர்வாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக நங்கவள்ளி மகளிர் பள்ளி மற்றும் நெத்திமேடு ஜெயராணி மகளிர் பள்ளி மாணவிகள் தலா 14 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து தேர்வான மாணவர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : NMMS ,Salem ,Tamil Nadu ,Government Assisted Schools ,Municipal ,Union Secondary Schools ,
× RELATED பொதுமக்களின் புகார்களை தெரிவிக்க அலுவலர்கள் நியமனம்