×

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

சேலம், மார்ச் 17: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்க அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) கண்மணி வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், 2026-27ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். 17 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் மாணவ-மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேரலாம். தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படிப்பில் சேருவதற்கு, இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இளநிலை படிப்பின் போது சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தகுதியுள்ள மாணவர்கள் வரும் 26ம் தேதி எஸ்டிஏடி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகளுக்கான தேர்வுப்போட்டி வரும் 30ம் தேதி சென்னையில் நடக்கிறது. தடகளம், பளுதூக்குதல், ஜூடோ, வாள்விளையாட்டு, கால்பந்து, கையுந்து பந்து ஆகிய போட்டிகள் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்திலும், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, கைப்பந்து, சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்திலும், ஹாக்கி, கபடி போட்டிகள் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்திலும் நடக்கிறது. சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி விடுதி, சத்தான உணவுகளுடன் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும். இதனை சேலம் மாட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு காந்தி ஸ்டேடியத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Salem ,Tamil Nadu Sports Development Authority ,District Sports Officer ,P) Kanmani ,Tamil Nadu Sports Development Authority… ,
× RELATED பொதுமக்களின் புகார்களை தெரிவிக்க அலுவலர்கள் நியமனம்