×

பறக்கும் படை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு

சேலம், மார்ச் 17: சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் பறக்கும்படை அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 99 பறக்கும் படை, 33 நிலை கண்காணிப்பு குழுவை அமைத்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனை பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரியின் தலைமையில், போலீசார், உதவியாளர்கள், வீடியோ பதிவாளர் ஆகியோருடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு அவர்கள் ெகாண்டு செல்லும் உடைமைகளை ஆய்வு செய்கின்றனர். இதில், ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் பரிசு பொருட்கள் இருந்தால், அதுகுறித்து விசாரணை நடத்துவதுடன், அதற்கான ஆவணங்களையும் பரிசோதனை செய்கின்றனர். இதனிடையே, சேலம் வடக்கு தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒரு நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை கோரிமேடு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சென்ற வாகனங்கள் மற்றும் அங்கிருந்து சேலம் வந்த வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டனர். இதேபோல், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, சூரமங்கலம் பகுதியிலும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையை நடத்தினர். மேலும் பறக்கும் படையினர் அந்தந்த சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Salem ,Salem district ,Tamil Nadu assembly ,
× RELATED பொதுமக்களின் புகார்களை தெரிவிக்க அலுவலர்கள் நியமனம்