சேலம், மார்ச் 16:தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனையடுத்து கட்சி தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதனிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருந்த தலைவர்களின் படங்கள் அறக்கப்பட்டு, விளம்பர பாதகைகள் மறைக்கப்பட்டன. மேலும், சேலம் அண்ணா பூங்காவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சிலைகள் திரையிட்டு மறைக்கப்பட்டன. இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், அதன் பீடம், கொடி மரங்கள் ஆகியவை துணி மூலம் மறைக்கப்பட்டது.
