×

திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னப்பிரசாத கூடத்தில் எரிவாயு தட்டுப்பாடா?

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு, அன்னபிரசாத கூடத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா என்பதற்கு தேவஸ்தானம் பதிலளித்து உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு தயாரிப்பு மற்றும் அன்னதானத்திற்கு எரிவாயு பற்றாக்குறை ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:

திருமலையில் நாள்தோறும் சராசரியாக 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. அதேநேரத்தில் திருவிழா காலங்களில் இந்த எண்ணிக்கை சுமார் 10 லட்சமாக அதிகரிக்கும். லட்டு தயாரிப்பு மட்டுமின்றி நாளொன்றுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானம் தயார் செய்து வழங்கப்படுகிறது. திருமலை அன்னதான மையத்தில் சுமார் 75,000 பேருக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சுமார் 2.25 லட்சம் உணவு அனைத்து மையங்களிலும் வழங்கப்படுகிறது. திருவிழாக்காலங்களில் தினசரி 3 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம். இதற்காக மொத்த சமையல் எரிவாயு நாளொன்றுக்கு சுமார் 10 டன்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் திருமலையில் சமையல் எரிவாயு விநியோகத்தில் தற்போது வரை எந்தவித பற்றாக்குறையோ அல்லது இடையூறோ இல்லை. பக்தர்கள் வழக்கம்போல் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் லட்டுகளை வாங்கிச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் எரிவாயு சப்ளை செய்யும் ஐ.ஓ.சி.எல். நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு தேவஸ்தானம் சார்பில் கடிதம் எழுதி உள்ளோம். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மீக மையமான திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு, அன்னப்பிரசாதம் தடை இல்லாமல் வழங்க எரிவாயு தடையில்லாமல் வழங்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம். இதற்கு அந்த நிறுவனமும் தடையின்றி எரிவாயு சப்ளை செய்வதாக உறுதி அளித்துள்ளது. எனவே அவை அடுத்தடுத்த நாட்களில் வந்துவிடும்.

லட்டு விநியோகத்தில் முன்னுரிமை முதலில் திருமலைக்கு வழங்கப்பட்டு, பின்னர் தேவஸ்தான தகவல் மையங்கள் மற்றும் முக்கியமான கோயில்களுக்கு வழங்கப்படுகிறது. லட்டு தயாரிப்பு மற்றும் பிரதான அன்னதான மையத்திற்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகத்தை பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் சிலிண்டர்கள் மற்ற அன்னதான சமையற்கூடத்தில் பயன்படுத்தப்படுகின்றன என அதிகாரிகள் கூறினர்.

Tags : Annaprasadam ,Tirupati Ezhumalaiyan Temple ,Tirumala ,laddu ,Annaprasadam hall ,Iran ,US ,Israel ,Tirumala… ,
× RELATED வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில்...