- ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வாரியம்
- முதல்வர்
- பரூக்
- ஸ்ரீநகர்
- ஃபரூக் அப்துல்லா
- ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கம்
- ஜம்மு…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு வழங்கப்பட்ட பிடிவாரண்ட் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய நிதியில் 43 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் நிதி கையாடல் மற்றும் குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஸ்ரீநகர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட இருந்த நிலையில், 88 வயதான பரூக் அப்துல்லா நேரில் ஆஜராகவில்லை. காணொலி காட்சி மூலம் ஆஜராக நீதிமன்றம் அளித்த வாய்ப்பையும் அவர் தரப்பு மறுத்ததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து பரூக் அப்துல்லாவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘கடந்த மார்ச் 11ம் தேதி ஜம்முவில் நடந்த பொது நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லாவை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை முயற்சி சம்பவத்தால் ஏற்பட்ட உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய கோளாறு உள்ள சூழலில், மருத்துவர்கள் அவரை பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்’ என்று மருத்துவ பரிசோதனை அறிக்கைகளுடன் வாதிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சில மணி நேரங்களிலேயே பரூக் அப்துல்லாவுக்கு வழங்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்து உத்தரவிட்டார். இருப்பினும், இந்த வழக்கில் ஆஜராகாத மற்றொரு நபரான மன்சூர் கசன்பர் அலி என்பவருக்கு வழங்கப்பட்ட பிடிவாரண்ட் நீடிக்கிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
