×

ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றம் இந்தியாவுக்கு வந்த கப்பல் மீது தாக்குதல்: துபாய் விமான நிலையம் மீது டிரோன் வீச்சு; மேற்கு ஆசியா போர் 12வது நாளாக நீடிப்பு

துபாய்: மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 12வது நாளாக நேற்றும் நீடித்தது. இப்போரால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் பயணிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கடலுக்கு அடியில் கண்ணிவெடிகளை வைக்க ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் 16 கண்ணிவெடி போர்க்கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இத்தகவலை அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்தார். மேலும், ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாசை குறிவைத்தும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியில் 3 வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இங்கிலாந்து ராணுவத்தால் நடத்தப்படும் ஐக்கிய ராஜ்ஜிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் நேற்று அறிவித்தது. இந்த தாக்குதலுக்கு எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை.

ஆனாலும், ஹார்முஸ் வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் தடை விதித்துள்ளதால் ஈரான் ராணுவமே தாக்குதல் நடத்தியிருக்கும் என நம்பப்படுகிறது. மேலும், ஓமன் கடல் பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த தாய்லாந்து கப்பல் மயூரி நரீ மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பலின் இன்ஜின் பகுதி தீப்பிடித்ததில் கப்பலில் இருந்த 20 ஊழியர்களை ஓமன் கடற்படை பத்திரமாக மீட்டது. மேலும் 3 பேரை மீட்கும் பணிகள் நடந்து வருதாக தகவல்கள் வெளியாகின. இந்த கப்பலில் 30 ஆயிரம் டன் சரக்குகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்றைய சூழலில், போர்க்கப்பல்கள் அல்லது பயணிகள், வணிக கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்திக்குள் அனுப்புவது தற்கொலைக்கு சமம் என பிரான்ஸ் கடற்படையின் ஓய்வுபெற்ற துணை நிர்வாகி பாஸ்கல் ஆசியூர் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதன் மூலம், அமெரிக்கா, இஸ்ரேல் மீது சர்வதேச நாடுகள் போர் நிறுத்தத்திற்கான அழுத்தம் கொடுக்கும் வகையில் போதுமான உலகளாவிய பொருளாதார பாதிப்பை ஈரான் ஏற்படுத்தி வருகிறது. மேலும், அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு இடமளித்த அரபு நாடுகளின் எண்ணெய் வயல்களையும் குறிவைத்து ஈரான் நேற்றும் பல்வேறு டிரோன்களை ஏவியது. அவை வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டதாக அரபு நாடுகள் கூறி உள்ளன. மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் 2 ஈரான் டிரோன்கள் நேற்று வெடித்து சிதறின.

இதில் இந்தியர் ஒருவர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். ஆனாலும் விமான சேவைகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்து வருவதாக துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே, ஈரானில் பொதுமக்கள் வசிக்கும் 10,000 இடங்களை அமெரிக்க-இஸ்ரேலிய படைகள் குண்டுவீசி தாக்கியதற்கு பதிலடியாக அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேலில் செயல்படும் சர்வதேச வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் துணை ராணுவமான புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக துணை ராணுவம் வெளியிட்ட தாக்குதல் பட்டியலில், கூகுள், ஐபிஎம், நிவிடியா, மைக்ரோசாப்ட், ஆரக்கிள் உள்ளிட்ட நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் பல சர்வதேச நிதி நிறுவனங்கள் உள்ள துபாய், சவுதி அரேபியா, பக்ரைன் கடுமையாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

* உலக கோப்பை கால்பந்து ஈரான் அணி பங்கேற்காது
உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க ஈரான் அணிக்கு அதிபர் டிரம்ப் அனுமதி வழங்கியிருந்தார். இந்நிலையில், போர் காரணமாக இந்த ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் அணியால் பங்கேற்க முடியாது என ஈரான் விளையாட்டு துறை அமைச்சர் டோன்யமாலி அந்நாட்டு அரசு செய்தி சேனலில் நேற்று அறிவித்துள்ளார்.

* மொஜ்தபாவுக்கு காயம்
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்ட அவரது மகன் மொஜ்தபா கமேனி (56) போரின் ஆரம்பத்திலேயே காயமடைந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இத்தகவலை இஸ்ரேல் உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியனின் மகன் யூசப் பெசேஷ்கியன் தனது டெலிகிராம் பதிவில், ‘‘மொஜ்தபா காயமடைந்ததாக கேள்விப்பட்டேன். அதைப் பற்றி தொடர்பில் இருந்த நண்பர்களிடம் கேட்டேன். அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் பிரச்னை இல்லை என்றும் சொன்னார்கள்’’ என கூறி உள்ளார். பொதுவாகவே மொஜ்தபா ரகசிய நபராக இருந்து வருகிறார். உச்ச தலைவரான பிறகும் கூட அவர் இதுவரை ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. போர் தொடங்கிய கடந்த 28ம் தேதியில் இருந்தே பொது வெளியிலும் அவர் தோன்றவில்லை.

* 2 இந்தியர்கள் பலி
வணிக கப்பல்கள் மீதான தாக்குதலில் 2 இந்தியர்கள் பலியாகி இருப்பதாகவும் ஒருவர் மாயமாகி இருப்பதாகவும் ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்துள்ளார். மேலும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்தியர்களின் நலனில் அரசு உறுதி கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* 28 இந்திய கப்பல்கள் தவிப்பு
பாரசீக வளைகுடாவில் 778 மாலுமிகள் உட்பட 28 இந்திய கப்பல்கள் மற்றும் சிக்கித் தவிப்பதாக ஒன்றிய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதில் 24 கப்பல்கள், 677 மாலுமிகள் ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அனைத்து கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் கூறி உள்ளார்.

* 80 ஈரான் மாலுமிகளின் உடல்கள் தூதரகத்தில் ஒப்படைக்க உத்தரவு
இலங்கை கடல் பகுதியில் ஈரான் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 84 ஈரான் மாலுமிகளின் உடல்களை அந்நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு மருத்துவமனையின் இயக்குநருக்கு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிர் தப்பிய 32 மாலுமிகள் தொடர்ந்து இலங்கையில் தங்கி உள்ளனர்.

* இத்தாலி கண்டனம்
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கமான தலைவராக கருதப்படும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக கூறி உள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘‘அச்சுறுத்தல்கள் பயங்கரமாகி வருகின்றன. சர்வதேச சட்டத்தின் எல்லைக்கு வெளியே ஒருதலைப்பட்ச தலையீடுகள் பெருகி வருகின்றன. ஈரான் அரசுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தலையீடு பரந்த நெருக்கடியின் ஒரு காரணமாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்’’ என்றார்.

Tags : Strait of Hormuz ,India ,Dubai airport ,West ,Asia ,Dubai ,US ,Israel ,Iran ,West Asia ,Gulf ,
× RELATED 30 நாள் அனுமதி ஏன்? இந்திய கூட்டாளிகள்...