துபாய்: வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தால் பெட்ரோலிய எண்ணெய் விநியோகத்தை விட குடிநீர் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மோதல்களின் போது கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் அதன் விலை உயர்வு மட்டுமே உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக 1991ம் ஆண்டு நடந்த வளைகுடா போரின் போது, பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்கள் இலக்கு வைக்கப்பட்ட நிகழ்வுகள் சர்வதேச விதிகளுக்கு அப்பாற்பட்டு அரங்கேறின. எண்ணெய் கிணறுகள் தீப்பற்றி எரிந்ததை விட, குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முடங்கியதே அங்கு வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்வை நிலைகுலையச் செய்தது. இந்நிலையில், தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முற்றி வரும் மோதலில் கச்சா எண்ணெய் விலையை விட குடிநீர் பாதுகாப்பே பெரும் நீண்டகால திட்டம் சார்ந்த அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
துபாய், குவைத் மற்றும் தோஹா போன்ற நகரங்கள் இயற்கை நன்னீர் ஆதாரம் ஏதுமின்றி, கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களையே முழுமையாக நம்பியுள்ளன. புள்ளி விபரங்களின்படி, குவைத்தின் குடிநீர் தேவையில்லை 90 சதவீதமும், ஓமனின் தேவையில் 86 சதவீதமும் மற்றும் சவுதி அரேபியாவின் தேவையில் 70 சதவீதமும் இந்த நிலையங்கள் மூலமே பூர்த்தியாகின்றன. கச்சா எண்ணெயை மாற்று வழிகளில் கொண்டு செல்ல முடியும், ஆனால் இந்த நிலையங்கள் தாக்கப்பட்டால் சில நாட்களிலேயே ஒட்டுமொத்த குடிநீர் விநியோகமும் முடங்கிவிடும் அபாயம் உள்ளது. தற்போதைய மோதலில் கடந்த 2ம் தேதி ஈரானிய ஏவுகணைகள் துபாயின் ஜபெல் அலி துறைமுகத்திற்கு அருகில் உள்ள மிகப்பெரிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து விழுந்தன.
அதேபோல் புஜைரா நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஹ்ரைனில் உள்ள ஒரு குடிநீர் நிலையமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதற்கு பதிலடியாக ஈரான் தரப்பில் கூறுகையில், ‘கெஷ்ம் தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலால் 30 கிராமங்களுக்கான குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது’ என்று குற்றம் சாட்டியுள்ளது. குடிநீர் விநியோகத்தை தாக்குவது சர்வதேச சட்டப்படி போர்க்குற்றமாகும். இருப்பினும், இந்த நீர்நிலைகள் மீதான தாக்குதல் தொடர்வது மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.
