×

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் முகாமிட்டிருந்த ஈரானின் 16 கண்ணிவெடி கப்பல்கள் குண்டுவீசி அழிப்பு: அமெரிக்காவின் அதிரடி தாக்குதலால் பதற்றம்

 

வாஷிங்டன்: சர்வதேச கடல் பகுதியில் ஈரான் கண்ணிவெடிகளை வைக்க முயன்றதால் அமெரிக்க படைகள் அந்நாட்டு கப்பல்களை தாக்கி அழித்துள்ளன. கடந்த பிப். 28ம் தேதியன்று அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூண்டது. உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டதுடன், வணிகக் கப்பல்களின் போக்குவரத்து 90 சதவீதம் வரை சரிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பி ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தச் சூழலில், நேற்று ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடற்படைக்குச் சொந்தமான இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தியது. ஈரானிடம் உள்ள 2,000 முதல் 6,000 வரையிலான கடல் கண்ணிவெடிகளை சிறிய ரகக் கப்பல்கள் மூலம் கடலில் பரப்ப ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு நடத்திய தாக்குதலில் கண்ணிவெடிகளை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானின் 16 போர்க்கப்பல்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டன. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், ஈரானின் 10 கப்பல்கள் அழிக்கப்பட்டதாக முதலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ராணுவ அதிகாரிகள் தரப்பில் 16 கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் கூறுகையில், ‘இந்த நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது; ஈரானின் ஏவுகணை பலம் 90 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், ‘கடல் வழிப்பாதையில் கண்ணிவெடிகளை வைக்கும் முயற்சிக்கு இதுவரை கண்டிராத அளவிலான பதிலடி தரப்படும்.

கச்சா எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுத்தால், அவர்கள் மீது 20 மடங்கு கூடுதல் பலத்துடன் தாக்குதல் நடத்தப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.உலக நாடுகளின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்த கடல் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலர் வரை உயர்ந்தது. பின்னர் சரிவு கண்டது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு காரணங்களுக்காக வணிக கப்பல்கள் தங்களது இருப்பிடத்தை காட்டும் கருவிகளை அணைத்து வைத்துவிட்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றன. அமெரிக்காவின் இந்த அதிரடி தாக்குதலால் வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

 

Tags : Strait of Hormuz ,US ,Washington ,Iran ,
× RELATED தாய்லாந்தின் புக்கெட் விமான நிலையத்தில் ஓடுதளம் தற்காலிகமாக மூடல்