புதுடெல்லி: ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் 220 அமெரிக்க வீரர்கள் பலியானதாக ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஈரான் நிலைகள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலால் போர் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பென்டகன் தரப்பில் 8 வீரர்கள் மட்டுமே காயமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது சுமார் 150 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராகிம் ஜுல்பகாரி கூறுகையில், ‘ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 220 அமெரிக்க வீரர்கள் மற்றும் கமாண்டர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.
இதில் பக்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவு அருகே 21 வீரர்களும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தப்ரா விமான தளத்தில் சுமார் 200 வீரர்களும் பலியாகியுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் பெர்சிய வளைகுடாவில் உள்ள அமெரிக்காவிற்குச் சொந்தமான எண்ணெய் டேங்கர் கப்பல், ரேடார் வலைப்பின்னல்கள் மற்றும் ஏவுகணை தளங்களையும் ஈரான் தாக்கி அழித்துள்ளது. இதற்கிடையே, கடந்த 1ம் தேதி குவைத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் 6 பேரின் உடல்கள் தாயகம் கொண்டு வரப்பட்டன. டோவர் விமான படைத் தளத்தில் நடந்த இந்த நிகழ்வில் அதிபர் டிரம்ப் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
