×

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தோட்ட உற்சவம்

பெரும்புதூர், மார்ச் 10: பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தோட்ட உற்சவம் நேற்று நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. பிறகு, மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி முதலிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மஞ்சள் சாமந்தி மாலை அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவர் கோடையாண்டவருக்குப் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு கோடை ஆண்டவர் மேளதாளங்கள் முழங்க சப்பரத்தில் எழுந்தருளி வல்லாசுரன் விழுந்த தோட்டத்திற்கு நண்பகலில் சென்றடைந்தார்.

இந்த உற்சவத்தை முன்னிட்டு வல்லக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள வல்லாசுர தோட்டம் சுத்தம் செய்யப்பட்டு, அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு மாலை 4 மணிக்கு கோடையாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு, சிறப்பு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு பெருமான் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பிறகு கோடையாண்டவர் அங்கிருந்து புறப்பட்டு வல்லக்கோட்டை கிராமத்தில் வீதி உலா வந்தார். தோட்ட உற்சவ ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் தலைமையில் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags : festival ,Vallakottai Murugan Temple ,Vallakottai Subramania Swamy Temple ,Perumbudur ,Ko ,
× RELATED காஞ்சியில் இதுவரை 1,533...