×

புதிய உச்ச தலைவரை எச்சரித்த விவகாரம்; உங்க உயிரை நீங்க காப்பாத்திக்குங்க! டிரம்புக்கு ஈரான் அதிகாரி கொலை மிரட்டல்

 

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் இரு நாட்டு தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக எச்சரித்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற அதிரடி ராணுவ தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் ஈரானின் ஏவுகணை வலிமையில் 50 சதவீதத்தை அழித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், ‘மொஜ்தபா கமேனியின் நியமனம் மிகப்பெரிய தவறு. அவர் திறமையற்றவர்; புதிய தலைவரால் நிம்மதியாக வாழ முடியாது என்று கருதுகிறேன்.

ஈரானின் தலைமைத் தேர்வில் அமெரிக்காவின் பங்களிப்பு இருக்க வேண்டும். அமெரிக்காவால் அங்கீகரிக்காத எந்தவொரு தலைவரும் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது. மொஜ்தபா தனது தந்தையின் தீவிரவாதப் போக்குடைய கொள்கைகளையே பின்பற்றுவார் என்பதால், அவருடன் அமைதியான முறையில் இணங்கிச் செல்வது சாத்தியமற்றது’ என்று டிரம்ப் கூறினார். இதற்குப் பதிலடியாக ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘உங்களை விட பெரிய தலைவர்களால் கூட ஈரானை ஒழிக்க முடியவில்லை. உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்; இல்லையெனில் நீங்கள் ஒழிக்கப்படுவீர்கள்!’ என்று டிரம்பிற்கு நேரடியாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தலைவர்களின் இந்த மோதலால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags : Supreme Leader ,Iran ,Trump ,Washington ,United ,States ,Operation Epic Pury ,US ,
× RELATED 40 கோடி பேரல் விடுவிக்க ஜி7 நாடுகள்...