×

போர் சூழலை காரணம் காட்டி மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் செயல்: ஒன்றிய அரசுக்கு எஸ்டிபிஐ கண்டனம்

சென்னை: போர் சூழலை காரணம் காட்டி உள்நாட்டு விநியோகத்தை முடக்குவது பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் செயல் என்று ஒன்றிய அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: வணிகப் பயன்பாடு மட்டுமின்றி, வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது மிகுந்த கவலையளிக்கிறது. வணிக ரீதியான பாதிப்பு பொருளாதாரத்தைச் சிதைக்கும் என்றால், வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் அடிப்படை தேவையைப் பாதிக்கும் நேரடிப் பிரச்னையாகும்.

சர்வதேசப் போர் சூழலைக் காரணம் காட்டி உள்நாட்டு விநியோகத்தை முடக்குவது, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் வளர்ச்சியையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் அடியோடு பாதிக்கும் செயலாகும். வணிகர்களின் இடர்களைக் கண்டுணர்ந்து, இதுதொடர்பாக இந்திய பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின்ள் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வரின் இந்த கோரிக்கையை ஒன்றிய அரசு மிகுந்த முக்கியத்துவத்துடன் பரிசீலிக்க வேண்டும். வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் மட்டுமின்றி, வீட்டு உபயோக சிலிண்டர்களும் எவ்வித தடையுமின்றி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே, பொதுமக்களின் இன்னல்களை தவிர்க்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : STBI ,Union Government ,Chennai ,STBI party ,state ,president ,Nellai Mubarak ,
× RELATED காஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் போராட்டம்