தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதேநேரம் அதிமுக- பா.ஜ. கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இழுபறியில் உள்ளது. அதிமுகவில் எந்தெந்த தொகுதியில் யாரை நிறுத்தலாம்? என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தி வருகிறார். தொகுதிக்கு 3 கோடீஸ்வரர் பட்டியலை தயார் செய்ய சொல்லி இருக்கார்.
இந்த சூழலில், தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு மேடையிலும் இத்தேர்தலில் போட்டி நடப்பதே திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் என கூறி வருகிறார். இது அதிமுகவினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தவெகவுக்கு இளைஞர்களின் வாக்குகள் செல்வதை தடுக்க நெல்லை மாவட்ட அதிமுகவினர் பேன்ட், சட்டைக்கு மாறி வருகின்றனர். அதிலும் ராதாபுரம் தொகுதியில் கடற்கரை பகுதிகள் அதிகம் இருப்பதால், தவெகவிற்கு ஓரளவுக்கு ஓட்டு வங்கி உள்ளது.
ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட இன்பதுரை தற்போது ராஜ்யசபா எம்.பி.யாகி விட்டதால், அத்தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் மத்தியில் கடும் போட்டி உள்ளது.
தேமுதிகவில் ராதாபுரம் எம்எல்ஏவாக இருந்த மைக்கேல் ராயப்பன், அதன்பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவிற்கு சென்றுவிட்டார்.
தற்போது அதிமுகவில் ராதாபுரம் சீட் கேட்டு போராடும் அவர், பேன்ட் சட்டையில் உலா வருகிறார். விருப்ப மனுவும் தாக்கல் செய்துள்ளார். இதுபோல் முன்னாள் எம்பி சவுந்தரராஜனும் ‘பேன்ட் சட்டை’ யில் உலா வருகிறார். தலை முடிக்கும் கன்னங்கரேல் என்று டை அடித்துவிட்டு தாங்களும் இளைஞர்கள்தான் என காட்டிக் கொள்வதில் அதிமுகவினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அதிமுக பிரமுகர் ஒருவர் கூறுகையில், ‘‘தவெகவிற்கு செல்லும் ஓட்டுக்களை தடுக்க, இன்றைய இளைஞர்கள் மத்தியில் தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக காட்டி கொள்ள வேண்டியதுள்ளது. மேலும் ஆடை வடிவமைப்பு மற்றும் பேச்சு திறன் ஆகியவற்றில் வெவ்வேறு யுக்திகளை கையாள வேண்டியதுள்ளது. நுனி நாக்கு ஆங்கிலம் அவசியமாக உள்ளது. அதிமுகவின் வாக்குகளை தவெக கபளீகரம் செய்ய தந்திரமாக திட்டமிடுகிறது.
அதை தடுக்கும் வகையில் அதிமுக நிர்வாகிகள் இப்போது வேட்டியை புறம் தள்ளிவிட்டு, ‘பேன்ட், ஷர்ட்டோடு’ கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இளைஞர்களின் வாக்குகளை தங்களை நோக்கி திருப்பிவிட புதிய யுக்திகளை கையாளுகின்றனர். கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.’’ என்றனர்.
