என்டிஏ கூட்டணியில் இடம் பிடித்து உள்ள அன்புமணி பாமக தரப்பிற்கு மட்டும், அதிமுக தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என பாஜ தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மற்ற கூட்டணி கட்சிகளுக்கு பாஜவுக்கு வழங்கப்படும் தொகுதிகளில் இருந்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதனால், அதிமுக தலைமையோடு தொகுதி குறித்த பேச்சுவார்த்தையை நடத்த, அன்புமணி தயாராகி வருகிறார். இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருக்கும் 11 சட்டமன்ற தொகுதிகளில், கடந்த முறை ஒதுக்கியது போல், 2 தொகுதிகளை கொடுக்க வேண்டும் என அன்புமணி தரப்பு கேட்டிருக்கிறது. ஆனால், எடப்பாடி, இம்முறை சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியை மட்டுமே தர முடியும் என கறாராக கூறி விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாமகவின் சிட்டிங் எம்எல்ஏ தொகுதிகளாக, சேலம் மாவட்டத்தில் மேட்டூர், சேலம் மேற்கு தொகுதிகள் உள்ளது. இதில், மேட்டூர் எம்எல்ஏவாக அன்புமணி தரப்பை சேர்ந்த சதாசிவம் உள்ளார். ஆனால், சேலம் மேற்கு எம்எல்ஏவாக ராமதாஸ் தரப்பை சேர்ந்த அருள் இருக்கிறார். இந்த முறை என்டிஏ கூட்டணிக்குள் அன்புமணி தரப்பு மட்டுமே தற்போது வரை வந்துள்ளதால், சேலத்தில் ஒரு தொகுதியை மட்டும் கொடுத்து விட வேண்டும் என்ற முடிவில் அதிமுக தலைமை இருக்கிறது.
அந்த தொகுதி, சேலம் மாநகரில் உள்ள சேலம் மேற்கு அல்லது சேலம் வடக்கு தொகுதியாக இருக்கும் என்ற தகவலையும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், தற்போது மேட்டூர் தொகுதி சிட்டிங் எம்எல்ஏவான சதாசிவத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, சேலம் மாநகரில் போட்டியிட மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.
இருப்பினும் எப்படியும் கடந்த முறை பெற்றது போல், சேலம் மாவட்டத்தில் 2 தொகுதிகளை பெற்று விட வேண்டும் என்பதில் அன்புமணி தரப்பு தீவிரம் காட்டியுள்ளது. மாங்கனி மாவட்டத்திலேயே மாழ்பழத்துக்கு ஒரு சீட்தானா என்று அக்கட்சியினரே புலம்பி
வருகின்றனர்.
