வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து பிப்ரவரி மாதம் 6ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களின் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் மற்றும் மக்கள் செல்வாக்கு, களப்பணிகள், பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் சில நிர்வாகிகள் பட்டியலிடப்பட்டனர். அவர்களுக்கான நேர்காணல் நேற்று காலை 10.30 மணியளவில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று வேட்பாளர்கள் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்கள் மற்றும் நிர்வாகிகள், பனையூர் அலுவலகத்துக்கு வந்து காத்திருந்தனர். ஆனால் விஜய், வழக்கம்போல தாமதமாக 11.30 மணிக்குதான் காரில் வந்து இறங்கினார். இதனால், நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள் அதிருப்பதியடைந்தனர். அதே நேரத்தில், வழக்கமாக விஜய் வருகிறார் என்றால் இளைஞர்கள், இளம்பெண்கள், தொண்டர்கள் ஏராளமானோர் வருகை தருவார்கள்.
மேலும் அப்பகுதியில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகளை வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பவுன்சர்கள் மூலம் தொண்டர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள். ஆனால் நேற்று சாலையில் எந்தவித தடுப்புகளோ இல்லை. தொண்டர்களும் குறைவாகவே காணப்பட்டனர். வழக்கமான கூட்டத்தைவிட குறைவான அளவிலேயே வந்திருந்தனர். சமீபத்தில் விஜய்யிடம் இருந்து அவரது மனைவி விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த விவாகரத்து பரபரப்புக்கு நடுவே விஜய், திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷாவுடன் ஒன்றாக வந்து பங்கேற்றார்.
இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாத பொருளானது. விஜய்யின் செயல்பாட்டை விமர்சித்தும், அவருக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து கூறி வருகின்றனர். இதுபோன்ற காரணமாக தொண்டர்கள் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நடந்த நேர்காணலின் மூலம் விஜய் முதல்கட்டமாக 60 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடைபெறும் நேர்காணல்களுக்குப் பிறகு மற்ற வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
விருப்பமனு கொடுத்த அனைவருக்கும் நேர்காணல் நடத்தாமல், ஏற்கனவே விஜய் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு மட்டுமே நேர்காணல் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் பேசிய விஜய், எவ்வாறு தேர்தல் பணியில் ஈடுபடவேண்டும், மாவட்ட செயலாளர்கள் தங்களின் தொகுதியில் மட்டுமல்லாமல் மற்ற தொகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியாதாகக் கூறப்படுகிறது.
* நேர்காணல் முறையா நடந்ததா? தொண்டர்கள் சந்தேகம்
தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று அக்கட்சி தலைமை அலுவலகமான பனையூரில் நடந்தது. கட்சி தலைவர் விஜய் நேர்காணல் நடத்தி ஆலோசனை வழங்கினார். இந்த நேர்காணல் நிகழ்ச்சி 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் சுமார் 50 பேர் காலை 9 மணிக்கு வந்தடைந்தனர். ஆனால் 10.30 மணிக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்படும் என தெரிவித்த அக்கட்சி தலைவர் விஜய் 11.30 மணி அளவில் தலைமை அலுவலகத்திற்கு வந்தடைந்தார். பின்னர் நேர்காணல் நிகழ்ச்சி முடிந்து 2.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார்.
இதில் 11.30 மணிக்கு அலுவலகத்திற்கு வந்த விஜய் தனது பணிகளை முடித்துக் கொண்டு 12 மணி அளவில்தான் நேர்காணலை தொடங்கியிருப்பார். இருப்பினும் 12 மணிக்கு தொடங்கி நேர்காணல் 2.30 மணி அளவில் முடித்துவிட்டு அங்கிருந்து விஜய் புறப்பட்டார். ஒருவரிடம் நேர்காணல் நடத்த வேண்டும் என சொன்னால் குறைந்தது அரை மணியிலிருந்து அல்லது ஒரு மணி நேரமாவது ஆகும். அதுவும் கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்திக்கும் இந்த கட்சியின் தலைவர் தேர்தலில் விண்ணப்பித்த வேட்பாளர்களை பற்றி தெரிந்து கொள்ள விருப்பமோ அல்லது முன் வந்ததுபோல தெரியவில்லை. அப்படி இருக்க விஜய் 2 மணி 30 நிமிடங்களில் 50க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் நடத்தி இருப்பாரா என அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்விகள் எழுந்துள்ளது.
* இருந்த கட்சியும் போச்சு… திமுக கூட்டணிக்கு ஆதரவு
தவெகவுக்கு கொடுத்த ஆதரவை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்ற ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான கடிதத்தை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வழங்கினார் எம்.எப்.தமீம். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கடந்த எட்டு மாதங்களாக தவெகவோடு பயணித்தோம். அவர்கள் செயல்பாடு சரியில்லாததால் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளோம். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க அறிவுறுத்தியும் விஜய் போகவில்லை. வரும் தேர்தலில் திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு தர இருக்கிறோம். தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டுள்ளோம் என கூறினார். இக்கட்சி தனது ஆதரவை திரும்பிப் பெற்றாலும், தமிழ்நாடு முஸ்லிம் லீக், பண்ருட்டி ராமச்சந்திரனின் எம்.ஜி.ஆர்.அதிமுக ஆகிய கட்சிகள் விஜய்க்கு கொடுத்த ஆதரவைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
