விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் 3 சட்டமன்ற தொகுதிகள் தங்களுக்கு வேண்டுமென பாஜ அடம் பிடித்து வருவது, அதிமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் 170 தொகுதிகளில் அதிமுக நிற்க வேண்டும். மீதமுள்ள 64 சீட்டுகளை கூட்டணிக்கு பிரித்து வழங்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதில் பாஜ 40 சீட்டு வரை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் 3 சட்டமன்ற தொகுதிகள் தங்களுக்கு வேண்டுமென கூறி வருகின்றனர். இது அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடியைத் தந்திருக்கிறது. மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் சாத்தூர் தொகுதியை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியை பாஜ மாநில துணைத்தலைவரான கோபால்சாமிக்கும், விருதுநகர் தொகுதியை பாஜ கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கனுக்கும் கேட்டு அதிமுக தலைமைக்கு நெருக்கடி தரப்படுகிறதாம்.
பாஜ மாநிலத் தலைவர் என்பதால் சாத்தூர் தொகுதியை தவிர்க்க முடியாமல் நயினாருக்கு தர அதிமுக தலைமை ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோபால்சாமி தமக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்கும் கட்டாயம் ராஜபாளையம் வேண்டுமென அதிமுக தலைமைக்கு நயினார் நரேந்திரன் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
நண்பர் தனக்கு எப்படியாவது சீட்டை பெற்று தந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ராஜபாளையத்தில் பிரசாரத்தை துவக்கி விட்டார் கோபால்சாமி. 3 தொகுதிகள் நம்ம கையில் வந்து விடும். நம்பிக்கையோடு வேலை பாருங்க… என மாநில தலைமை தரப்பில் பாஜ நிர்வாகிகளுக்கு மறைமுகமாக கட்டளையிடப்பட்டுள்ளதாம். இதுகுறித்து சமீபத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சிலர் தங்களது குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், மாஜி அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி விருதுநகரை எப்படியாவது அதிமுகவிற்கு பெற்று தந்து விடுவேன். ஆகவே நம்ம கட்சியை ஜெயிக்க வைக்கும் வேலைகளை பாருங்கள் என நிர்வாகிகளிடம் கூறியுள்ளது கூட்டணியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘நயினார் நாகேந்திரன் மற்றும் கோபால்சாமி இருவருமே அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டதால்தான், அதிமுகவிலிருந்து பாஜ கட்சிக்கு சென்றனர். கட்சி தலைமைக்கு துரோகம் செய்துவிட்டு மாற்றுக்கட்சிக்கு சென்றவர்கள். அவர்களுக்காக நாங்க தொகுதியை விட்டுத் தரணுமா? என்ன வேணும்னாலும் ஆகட்டும். ஒரு கை பார்க்கத் தான் போகிறோம்’’ என்றனர்.
