×

அது வேற வாய்… இது நாற வாய்…. இலவசங்களுக்கு அன்று எதிர்ப்பு இன்று காப்பி, பேஸ்ட்; தவெகவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்: முட்டு கொடுக்க முடியல என கதறும் ரசிகர்கள்

‘ஒரு விரல் புரட்சியே…’ என அரசின் நலத்திட்டங்களை ‘ஓசி… ஓசி…’ என கிண்டல் செய்து விர்ச்சுவல் வாரியர்ஸை தூண்டிவிட்டு லேப்டாப், மிக்ஸி கிரைண்டர்களை வீதியில் வீசி நாடகம் நடத்தியவர் தவெக தலைவர் விஜய். ஆனால், அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாமல், மகளிர் தினத்தையொட்டி தவெக சார்பில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் பின் வாங்கி இருக்கிறார் விஜய். ஆம், மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய விஜய் மகளிர் நலன் சார்ந்த 12 வாக்குறுதிகளை வெளியிட்டார். அந்த வாக்குறுதிகள் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது. இலவச திட்டங்களுக்கு எதிராக தவெக நிர்வாகிகள் பேசிய பழைய பேச்சுகளை எல்லாம் தேடி எடுத்து மீண்டும் வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் தவெகவை புரட்டி எடுத்து வருகின்றனர்.

60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2,500 ரூபாய், அனைத்து குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு காஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்குவது, பெண்கள் திருமணத்திற்காக ஒரு பவுன் தங்கமும், தரமான பட்டுச் சேலையும் அண்ணன் வீட்டு சீராக வழங்குவதோடு, கல்வி இடைநிற்றலை தடுக்க பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் 15,000 ரூபாய் பொருளாதார உதவித் தொகை, அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் உத்தரவிடப்படும் என இலவசங்களை வாரி வழங்கியிருக்கிறார்.

‘‘என்னது இலவசங்களை கொடுத்து மக்களை கெடுக்குறாங்கனு சொல்றதும், இலவசமா அறிவிப்புகளை மக்களுக்கு அள்ளிக்கொடுப்போம்னு சொல்றதும் ஒரே கட்சியா’’ என தவெக விர்ச்சுவல் வாரியர்சும், நெட்டிசன்களும் உறைந்து போய் உள்ளது. தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘ஒரு கட்சி மாசம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் சொல்றாங்க, இன்னொரு கட்சி இரண்டாயிரம்னு சொல்றாங்க, இதுக்கு என்னங்க முடிவு’’ என கேட்டிருந்தார். இதேபோல தவெக மேடையில் ஒரு பெண் தொண்டர், ‘‘வேண்டாம், வேண்டாம் ஓசி பஸ் வேண்டாம்.

வேண்டாம், வேண்டாம். உதவி தொகை வேண்டாம்’’ என இலவசங்களுக்கு எதிராக முழக்கமிட்ட காட்சியை, விஜய் அறிவித்த இலவச திட்டங்களை வேண்டாம் என தவெகவினர் சொல்வார்களா என கேள்வியுடன் பகிர்ந்து வருகின்றனர். இப்போது அவர்களது கட்சி தலைவரே பெண்களுக்கு ரூ.2,500 எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘‘அவர் கிட்ட யாராச்சும் சொல்லுங்கப்பா… நாங்களும் எவ்வளவு தான் முட்டு கொடுப்பது, அண்ணா நீங்கள் என்ன வேணாலும் செய்ங்க, முட்டுக் கொடுக்க நாங்கள் இருக்கிறோம்.

உங்கள் அறிக்கை எல்லாம் ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்கிறது அண்ணா! புதுசா ஏதாவது செய்ங்க. நாட்டுல எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு! பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், ஒன்றிய அரசை பார்த்து, மக்கள் எல்லாம் சாலை வரி கட்டுகிறார்கள். பிறகு எதற்கு சுங்கக் கட்டணம் என கேட்டுள்ளார். அது போல் நீங்களும் ஒன்றிய அரசை ஏதாவது கேளுங்க அண்ணா! ஏன் ஒன்றிய அரசை விமர்சிக்கவே மாட்டேங்கிறீங்க’’ என தவெக பெண் தொண்டர் ஒருவர் எழுப்பிய கேள்விகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவெக தலைவர் தனது படங்களை தான் தேர்ந்தெடுத்து நடிக்காமல், காப்பி பேஸ்ட் முறையில் ரீமேக் செய்து நடிக்கிறார் என்றால், அரசியலிலும் சுயமாக யோசிக்காமல் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செயல்படுத்தும் திட்டங்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார். தவெக விஜய் அடிக்கும் இந்த அந்தர் பல்டி டெக்னிக் எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது அல்லவா?. ஆம், இவர்களது கொள்கை எதிரியான பாஜ இதே நிலைப்பாட்டில் இருப்பவர்கள் தான். இந்த பக்கம் வந்து இலவசங்களை எதிர்த்து பேசிவிட்டு, அந்த பக்கமாக போய் இலவசங்களை அவர்கள் மாநிலத்தில் அமல்படுத்துவார்கள்.

அரசியல் கட்சிகள் வழங்கும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக 2022ம் ஆண்டு உ.பி-யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, “இலவச கலாசாரம் நாட்டுக்கு ஆபத்தானது. எனவே, அதற்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இலவச கலாசாரத்தை வளர்ப்பவர்கள் புதிய எக்ஸ்பிரஸ் சாலைகளையோ, புதிய விமான நிலையங்களையோ ஒருபோதும் உருவாக்க மாட்டார்கள். எனவே, இலவச கலாசாரத்தை இந்திய அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.

ஆனால், பாருங்கள் பாஜ ஆளும் டெல்லியில் மாநகரப் பேருந்துகளில் பெண்கள் ‘பிங்க் டிக்கெட்’ பெற்று இலவசமாகப் பயணிக்கலாம். இதே திட்டம் பாஜ ஆளும் ஒடிசா மாநிலத்தில் லக்ஷ்மி திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. பாஜ கூட்டணியில் உள்ள ஆந்திர மாநில அரசு தமிழகத்தைப் போலவே பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை தொடர்கிறது. இதற்கெல்லாம் பாஜவிடமும் பதில் கிடையாது, தவெகவிடமும் பதில் கிடையாது. பாஜவின் இந்த தகிடுதத்தம் காண வெகுதூரம் செல்ல வேண்டாம், கர்நாடகாவில் 2023ம் ஆண்டு தேர்தலில் இதே பாஜ அரசு தான் இலவச வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது.

அரசின் திட்டங்களை நேரடியாக பாராட்ட மனமில்லாமல், காப்பி பேஸ்ட் செய்து ஏதோ இவர்களே புதிதாக யோசித்தது போல் செய்கின்றனர். கொள்கை கோட்பாடு இல்லாமல் திரியும் கட்சிகள் பாஜ, தவெக போல் முன்னொன்று பின்னொன்று என மாற்றி மாற்றி இப்படி பேசிக்கொண்டே இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே அண்ணி விஷயத்துலேயே முட்டு கொடுக்க முடியாம தவிக்கிறோம். இப்போ அடுத்ததுக்கு எப்படி முட்டு கொடுக்குறது என தவெக தொண்டர்கள் மற்றும் விஜய்யின் ரசிகை, ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Tags : Daveka ,Vijay ,Virtual Warriors ,
× RELATED சொல்லிட்டாங்க…