×

திக்கு திசை தெரியாமல் திண்டாடுகிறார்; பாஜகவிடம் சரணடைய ராமதாஸ் முடிவு?

 

தமிழகத்தில் கடந்த காலங்களில் ஆளுமையில் இருந்த கட்சிகளில் ஒன்றாக பாமக பார்க்கப்பட்டது. ஆனால் தந்தை, மகன் இடையிலான மோதலுக்குபின் அக்கட்சி இரண்டாக பிளவுபட்டு 2026 பொதுத்தேர்தலை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணியை அன்புமணி உறுதி செய்துவிட்ட நிலையில் சின்னத்தையும் தற்காலிகமாக தன்வசமாக்கிக் கொண்டார். இதனால் கடும் விரக்தியில் உள்ள ராமதாஸ் தன்னை நம்பியிருக்கும் நிர்வாகிகளின், தொண்டர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இருப்பினும் வயது மூப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை தாமதம் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை எந்த அணியுடன் தனது கட்சிப் பயணம் என்பதை அறிவிக்க முடியாத நிலையில் உள்ளார். திமுகவில் கூட்டணிக்கு வாய்ப்பில்லாத நிலையில் தவெகவுடன் போகலாம் என்ற நிர்வாகிகளின் ஏகோபித்த கருத்துக்கு செவிசாய்க்காமல், நேர் எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்து அவர் காய்நகர்த்தி வருகிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் நிர்வாகிகள் விழிபிதுங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவுடன் அன்புமணி கூட்டணியை முடிவு செய்தாலும் தொகுதி எண்ணிக்கை முடிவாகாத நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, அதிமுக மூத்த தலைவர்கள் சிலரை தைலாபுரம் வட்டாரங்கள் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. அதற்கு உள்கட்சி விவகாரங்களில் எங்களால் தலையிட முடியாது என கைவிரித்ததோடு, எல்லாம் டெல்லி கையில்தான் உள்ளது என கூற, யாரிடம் இதுவரை பிடிகொடுக்காமல் ராமதாஸ் இருந்தாரோ அவர்களை தேடிச் சென்று சரணடையும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது மகளும், கட்சியின் செயல் தலைவருமான காந்தி மூலமாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை தொடர்பு கொண்டு தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.

முதல்கட்டமாக மாம்பழம் சின்னத்தில் தாங்கள் தெரிவிக்கும் குறிப்பிட்ட தொகுதிகளில், வேட்பாளர்களை போட்டியிட வழிவகை செய்ய வேண்டும், தேர்தல் செலவுகளை ஈடுசெய்ய வேண்டும், இதை ஒப்புக் கொண்டால் எத்தனை சீட் என்ற விபரத்தை தெரிவிப்பதாக கூறியுள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துவிட்ட நிலையில், பாமக வாக்கு வங்கியை இழக்க பாஜ விரும்பவில்லை என்பதால் ராமதாசின் நிலைப்பாட்டினை அன்புமணியிடம் கூறி, ஒப்புதலும் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. ராமதாசை எப்படியாவது முதலில் உள்ளே இழுத்துவிட வேண்டும், மற்றதை அப்புறமாக பேசி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என பாஜ கருதுகிறது.

 

Tags : Dikku ,Ramadoss ,BJP ,PMK ,Tamil Nadu ,2026 general elections ,Anbumani ,AIADMK ,
× RELATED சொல்லிட்டாங்க…