×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்கு 4,29,394 வீடுகள்

 

* ரூ.482 கோடியில் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் 5,281 கட்டமைப்புகள் மேம்பாடு
* 25.56 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்லோர்க்கும் வீடு வேண்டும் என்பதற்காகத்தான் கலைஞர் கனவு இல்லம் திட்டம். எல்லோர்க்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பது திராவிட மாடல் அரசின் இலக்கு. 2030ம் ஆண்டிற்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது.

ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வீதம் 2 லட்சம் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டத்தை அனுமதித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் இரண்டே ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகளில் 1,79,850 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மேலும் 1 லட்சம் வீடுகள் ரூ.3500 கோடியில் கட்டப்படும் என அறிவித்துள்ளது திராவிட மாடல் அரசு.

2016-21 ஆண்டுகளில் முந்தைய ஆட்சியில் 1 லட்சம் வீடுகள் தான் கட்டப்பட்டன. ஆனால் 2024-26 இரண்டே ஆண்டுகளில் 1,79,850 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, மேலும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 150 வீடுகள் கட்டப்படுகின்றன. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மட்டும் அல்ல, இலங்கை தமிழர்களுக்கு ரூ.589 கோடி ஒதுக்கீட்டில் 10,045 நிரந்தர வீடுகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 7,469 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து 1 லட்சத்து 79 ஆயிரத்து 850 வீடுகள் கட்டப்படுகின்றன.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ரூ.3,058 கோடியில் 2.63 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின்கீழ் ரூ.8,384 கோடியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, மேலும் 53,467 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

2016-21 முந்தைய ஆட்சியில் 27,688 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், 2021-26 திராவிட மாடல் ஆட்சியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்திய அயோத்திதாச பண்டிதர் குறியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.482 கோடி மதிப்பீட்டில் 5281 உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2021-26 திராவிட மாடல் ஆட்சியில் 23.56 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பழங்குடியினர் நலம் நாடும் தொல்குடி திட்டத்தில் ரூ.221 கோடி மதிப்பீட்டில் 7,674 பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுளன. ஒற்றைச் சாளர முறை திட்டத்தின்கீழ் 24,446 மனைப்பிரிவு விண்ணப்பங்களுக்கும், 2002 கட்டிட அனுமதி விண்ணப்பங்களுக்கு திராவிட மாடல் அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆகமொத்தம், திராவிட மாடல் அரசு 2021 முதல் 5 ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகளைக் கட்டியுள்ளது.

ரூ.482 கோடியில் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் 5,281 கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 23.56 லட்சம் ஏழைகளின் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி எல்லாருக்கும் எல்லாம் என்னும் தத்துவத்தின்படி திராவிட மாடல் அரசு ஏழை எளிய நலிந்த சமுதாய மக்களின் அடிப்படை தேவைகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி தமிழ்நாட்டிற்கு பெருமைகளை சேர்க்கிறது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Adi Dravidians ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் துறை...