×

மகளிர் தினம் கொண்டாடுகிறவர் மனைவியை விரட்டியடிக்கிறார் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் தொடர்ந்து வசிக்க அனுமதி கேட்டு சங்கீதா புதிய மனு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய் நீலாங்கரையில் உள்ள வீட்டிற்குள் தன்னை அனுமதிக்கவில்லை என்றும், அந்த வீட்டில் குழந்தைகளுடன் வசிக்க அனுமதி வழங்க கோரியும் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி தாக்கல் செய்த விவாகரத்து மனுவில், இங்கிலாந்து நாட்டு குடிமகளான எனக்கும் ஜோசப் விஜய் சந்திரசேகருக்கும் கடந்த 1998 ஜூலை 10ம் தேதி இங்கிலாந்தில் பதிவு திருமணம் நடந்தது.

பின்னர், 1999 ஆகஸ்ட் 25ம் தேதி சென்னை எழும்பூர் ராஜா முத்தையா மன்றத்தில் இந்து முறைப்படி திருமணம் நடத்தப்பட்டது. நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், காசுரீனா டிரைவ் எண் 36ல் உள்ள வீட்டில் வசித்து வருகிறேன். என்னுடைய கணவர், தமிழ் திரைத் துறையில் முக்கிய நடிகராவார். 2024ம் ஆண்டு அரசியலுக்கு நுழைந்து “தமிழக வெற்றி கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். நான் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்துவந்தேன். எங்களுக்கு ஜேசன் சஞ்சய் (25) என்ற மகனும், திவயா சாஷா (20) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த ஏப்ரல் 2021ல் விஜய் ஒரு நடிகையுடன் கள்ள உறவில் இருப்பது எனக்கு தெரியவந்தது. இதுபற்றி விஜய்யிடம் கேட்டபோது, அந்த நடிகையுடனான கள்ள உறவை முறித்துக்கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால், வாக்குறுதியை மீறி அந்த உறவை அவர் கைவிடவில்லை. இது எனக்கு தீராத மனவேதனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு, என்னை உடல், மன ரீதியாக விஜய் புறக்கணிக்க தொடங்கினார். தாம்பத்திய உரிமையை மறுத்தார். என்னிடம் இருந்து விலகிய விஜய் 2021 முதல், தகாத வார்த்தைகளால் வசைப்பாட துவங்கினார்.

ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வாழும் நிலைக்கு என்னை தள்ளினார். அதே நேரத்தில், விஜய் அந்த நடிகையுடன் வெளிநாடு பயணம் செய்து, பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அந்த நடிகையும் இந்த பயணங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.இதற்கு விஜய் மறைமுகமாக ஆதரவு தந்தார். இந்த போட்டோக்களால் நானும் என் குழந்தைகளும் மிகுந்த அவமானத்துக்குள்ளானோம். தேவையற்ற விளம்பரத்தைத் தவிர்க்கவும், அனைவரின் கண்ணியத்தையும் பாதுகாக்கவும், தற்போது நடிகையின் பெயரை வெளியிடவில்லை.

இருப்பினும், தேவையெனில், விசாரணையின் போது அந்த நடிகையை இந்த வழக்கில் சேர்க்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். கடந்த 2024ம் ஆண்டில் அந்த நடிகைக்கும், விஜய்க்கும் இடையேயான கள்ள தொடர்பு வெளிவர தொடங்கியது. இது தொடர்பாக வக்கீல் மூலம் விஜய்க்கு பல நோட்டீஸ்களும், கடிதங்களும் அனுப்பியும் விஜய் தன்னுடைய தவறுக்காக வருந்துவதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக என் செலவுக்கு கொடுத்து வந்த பணத்தை குறைந்தார். மேலும், சுதந்திரமாக வெளியே சென்று வருவதை தடுத்தார்.

தற்போது எங்களுக்கு இடையேயான திருமண உறவு பெயரளவில் மட்டுமே உள்ளது. முற்றிலும் சிதைந்துள்ள திருமண உறவை இனி மீட்க இயலாது நிலை உள்ளது. தொடர் மன வேதனை, அவமானம் மற்றும் துன்பமாக மாறிய திருமண உறவில் இனியும் என்னால் தொடர முடியாது. விஜய்யின் கள்ள உறவால் தொடர்ச்சியாக பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் அவமானத்திற்கு ஆளான போதிலும் அவருக்கு உள்ள நற்பெயர் மற்றும் புகழைக் கருத்தில் கொண்டு இந்த பிரச்னையை சுமுகமாக தீர்க்க உண்மையான மற்றும் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டேன்.

கடைசியாக விஜய்யுடன் தனிப்பட்ட முறையில் பேசி இருவரின் நன்மதிப்புக்கும் பாதிப்பும் ஏற்படுத்தாமல் கவுரவமாக பிரிந்து வாழ முயற்சி செய்தேன். இதற்காக இரு முறை அவருடன் பேசினேன். கடைசியாக கடந்த 2025 நவம்பர் 9ம் தேதி அவருடன் பேசினேன. ஆனால், அப்போதும், இருவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சுமுக தீர்வு ஏற்படவில்லை. இதனால், வேறு வழியின்றி இந்த விவகாரத்து மனுவை தாக்கல் செய்கிறேன். விஜய்க்கும் அந்த நடிகைக்கும் இடையேயான கள்ள உறவு இன்றுவரை தொடர்கிறது.

எனவே, சென்னை எழும்பூர் ராஜா முத்தையா மன்றத்தில் கடந்த 1999 ஆகஸ்ட் 25ம் தேதி எனக்கும் விஜய்க்கும் நடந்த திருமணத்தை 1954ம் ஆண்டின் சிறப்பு திருமணச் சட்ட பிரிவுகளின் கீழ் ரத்து செய்து விவாகரத்து வழங்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணை முடிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை, நீலாங்கரையில் உள்ள இல்லத்திலோ அல்லது அதற்கு இணையான விஜய்யின் அந்தஸ்துக்கு உகந்த வேறொரு வீட்டிலோ என்னை தங்க வைக்குமாறு உத்தரவிட வேண்டும்.

அவரது வருமானம், சமூக அந்தஸ்தை கருத்தில் கொண்டு நேர்மையான மற்றும் நியாயமான நிரந்தர ஜீவனாம்சத்தை அளிக்க என் கணவரான விஜய்க்கு உத்தரவிட வேண்டுகிறேன். வழக்கு செலவுகள் முழுமையையும் விஜய் தரவும் உத்தரவிட வேண்டும். நான், என் குழந்தைகள், விஜய் ஆகியோரின் மதிப்பு, மரியாதையை பாதுகாக்கும் வகையில் இந்த வழக்கின் விசாரணையை முழுமையாக ரகசியமாக நடத்தவேண்டும்.

இந்த வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிடவோ, விவாதிக்கவோ, பேட்டி எடுத்து வெளியிடவோ யூடியூப் சேனல்கள், முகநூல் பக்கங்கள், அச்சு உள்ளிட்ட மீடியாக்களுக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதிக்க வேண்டும். இல்லையென்றால் நானும் எனது குடும்பத்தினரும் மேலும் அவமானத்திற்கும் மனவேதனைக்கும் ஆளாவோம் என்று கோரியிருந்தார். இந்த மனு வரும் ஏப்ரல் 20ம் தேதி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விஜய்யிடம் விவாகரத்து கோரி நான் மனு தாக்கல் செய்த பிறகு விஜய்யின் தொழில் மற்றும் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவருடன் சமாதானமாக செல்ல நான் எடுத்த முயற்சிகளை விஜய் ஏற்கவில்லை. மாறாக என்னை நீலாங்கரை வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று தனது வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனால்தான் இந்த புதிய மனுவை தாக்கல் செய்கிறேன்.

கடந்த 26 ஆண்டுகளாக விஜய்யுடன் குடும்பம் நடத்திய எனக்கு நான் புகுந்த வீட்டுக்குள்ளேயே விட மறுக்கிறார். நான் இங்கிலாந்து குடிமகள் என்பதால் சென்னையில் எனக்கு வேறு எங்கும் குடியிருக்க இடம் இல்லை. எனவே, நான் தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும்வரை தற்போது வசிக்கும் நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில் உள்ள காசுரீனா டிரைவ் இல்லத்தில் என்னை தொடர்ந்து வசிக்க அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த இடைக்கால உத்தரவு கோரிய மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Women's Day ,Sangeeta ,Vijay ,Neelankarai ,Chengalpattu ,Chennai ,Thaveka ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் துறை...