யோகம் என்பதற்கும் தோஷம் என்பதற்கும் இருவிதமான பொருட்கள் உண்டு. யோகம் என்பதனை கொடுக்கக்கூடியது என்றும், சுபம் என்றும் சொல்லலாம். தோஷம் என்பதனை தடுக்கக்கூடியது என்றும், கெடுக்கக்கூடியது என்றும் சொல்லலாம். இவற்றில் இரண்டுமே கிரக இணைவுகளால் தரக்கூடிய பலன்கள்தான் என்பது உறுதி. சில ஜாதகங்களுக்கு வெற்றி என்பது தைரியத்தாலும் பராக்கிரமத்தாலும் நிகழக்கூடியது. அதனை மறுப்பதற்கில்லை. அந்த தைரியமும், வெற்றியும் தரக்கூடிய யோகங்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரம் சில கிரக பாவ இணைவு களைப் பற்றி தெளிவாக கூறியிருக்கிறது. நமது அன்றாட வாழ்விலும் செய்திகள் வாயிலாக சில விஷயங்களைப் பற்றியும், சிலரைப் பற்றியும் அறிகிறோம். இவர் அந்த சாகசம் செய்ததால்தான் முன்னேறினார் என்றும், சிலர் இந்த விளையாட்டுகளில் சிறப்பாக விளையாடினார், நாட்டிற்கு வெற்றி தேடித் தந்தார் என்று சொல்கிறார்கள் என்பதெல்லாம் இந்த மூன்றாம் பாவம் மற்றும் தைரியத்தால் நிகழக்கூடிய யோகத்தின் விளைவாகும். இதுவே சிலருக்கு தோஷமாகவும் கெட்டப் பெயரை கொடுக்கக்கூடிய அமைப்பாகவும் இருப்பதுண்டு. அப்படி ஒரு யோகம்தான் சூல யோகம் ஆகும்.
சூல யோகம் என்றால் என்ன?
‘சூலம்’ என்பதற்கு பல்வேறு பொருட்கள் உள்ளன. ‘சூல’ என்றால் ‘மூன்று’ என்று பொருள்படும். சிவபெருமான் கையில் வைத்திருக்கும் ஆயுதம் சூலம். இதற்கு மூன்று முனை கொண்ட ஆயுதம் என்றும் பொருள்படும். அதுமட்டுமின்றி மூன்றை குறிக்கும் பொருளாகவும் சூலம் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. பயணங்களில் குறுகிய பயணத்தை சூலம் என்றும் அழைக்கிறோம். அதுமட்டுமின்றி திசைக்கான சொல்லாகவும் இந்த சூலம் உள்ளது. சாயா கிரகங்களான ராகு – கேதுவை தவிர மற்ற ஏழு கிரகங்களும் மூன்று பாவங்களுக்குள்ளாக அமர்வது சூல யோகமாகும். இந்த கிரகங்கள் ஒரு பாவகத்தில் இரண்டு, மற்றொரு பாவகத்தில் இரண்டு. அதற்கடுத்த பாவகத்தில் மூன்று என வரிசையாக ஏழு கிரகங்கள் அமையலாம். ஒன்றில் ஒரு கிரகமோ மற்றவற்றில் மூன்று அல்லது நான்கு கிரகங்களோ அமையலாம். ஜாதகத்திற்குள் மூன்று பாவகங்களுக்குள் ஏழு கிரகங்கள் அமைவதுதான் சூல யோகம் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இந்த யோகம் முழுமையான நன்மை தருமா என்றால் அதிக தைரியத்தை கொடுக்கக்கூடியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சூல யோகத்தின் உள் அமைப்புகள் என்ன?
சில ஜாதகங்கள் அமைப்பின்படி, மூன்றாம் பாவகத்தின் திரி கோண அமைப்பில் சகோதரர்கள் அதிகளவில் இருப்பதற்கும் இவர்களின் வெற்றிக்கும் துணையாக இருப்பார்கள். கோட்சார கிரகங்கள் இதன் மீது பயணிக்கும் பொழுது மிகவும் கவனமாக இருப்பது அவசியமாக உள்ளது. எனவே, யோகத்தின் பின்புலத்தில் தோஷங்கள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஒரு நன்மைக்குள் தீமையும் ஒரு தீமைக்குள் பல நன்மைகள் இருப்பதுவே இயற்கையின் அமைப்பாகும். ஒரு பழமொழி முரட்டு தைரியம் மூர்க்கனுக்கு உண்டு என்பதாகும். இந்த யோகத்தின் பலன்கள் லக்னத்திற்கு மற்றும் ராசிக்கு தகுந்தவாறு சில வேறுபட்ட பலன்களை தரும் அமைப்பாகும். இந்த மூன்று பாவங்களும் திரிகோணமாக அமையப் பெற்றவர்கள் சரியான வழித்தடத்தில் சென்றால் கண்டிப்பாக வெற்றியாளராக இருப்பார்கள் என்பது நிச்சயம். மேலும், இவற்றின் திசா, புத்திகளுக்கு ஏற்ப சில பலன்கள் உண்டு. அதுமட்டுமின்றி அசுப கிரகங்கள் கூட்டாக இருந்து, சுப கிரகங்கள் கூட்டாக இருந்தால் ஒரு பலன்களும் உண்டாகும். சரியான முறையில் பரிகாரங்கள் செய்பவர்களுக்கு சரியான பலன்கள் நிச்சயம் உண்டு.
சூல யோகத்தின் பலன்கள் என்ன?
*அதிக தைரியத்தையும் அதன் வாயிலாக வெற்றியை தரும் யோக அமைப்பாகும்.
*முற்காலத்தில் வீர விளையாட்டுகளில் வெற்றி பெற்று அதன் வாயிலாக திருமணம் நடப்பது ஆகியவையும் இந்த சூல யோகத்தின் அமைப்பாகும்.
*திடீரென கோபம் இவர்களுக்கு வந்து செல்லும் அமைப்பாகும். சிலருக்கு எந்த வேகத்தில் கோபம் வருகிறதோ வந்த வேகத்தில் கோபம் சென்றுவிடும்.
*இன்னும் சிலருக்கு இசையின் மீது அதிக ஈடுபாட்டை கொடுக்கும் அமைப்பாகும்.
*அடிக்கடி கோபத்தை கொண்டவராகவும் சில தருணங்களில் அப்படியே மறந்துவிடும் அமைப்பாகும். இதில் நியாயங்கள் இருக்கும். அதன் அடிப்படையில்தான் அவ்வாறு கோபத்தை ஏற்படுத்தும்.
*சிலருக்கு அடிக்கடி சகோதரர்களுக்கு தோஷங்களை கொடுப்பது இந்த யோகத்தின் உள் அமைப்பாகும்.
சூல யோகத்திற்கான பரிகாரங்கள் என்ன?
இந்த யோகத்திற்கு பல கிரகங்கள் உட்படுவதால் நவதானியத்தை எடுத்து தினமும் தலையை சுற்றி பின்பு அதனை தெருவின் முச்சந்தியில் போட்டுவிடுவது தோஷத்தை குறைக்கும்.
சரபேஸ்வரர், யோக லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் ஆகிய தெய்வங்களை வாரத்தின் எல்லா நாட்களிலும் அபிஷேகமோ அல்லது அர்ச்சனை செய்தோ வழிபடுவது சிறப்பான அமைப்பாகும். உங்களுக்குரிய தோஷங்களை குறைத்து சுப பலன்களை தரும் அமைப்பாக இந்த தெய்வங்கள் உள்ளன.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஆத்மார்த்தமாக மந்திர ஜபம் செய்வது சிறப்பான அமைப்பாகும். உக்கிரமான தெய்வங்களை மந்திர ஜபம் செய்வது சிறப்பாகும்.
