×

நிச்சயதார்த்தம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்தலாமா?

?வீடு கட்டும்போது முதலில் எந்த தெய்வத்தை வணங்கிவிட்டு வேலையைத் தொடங்க வேண்டும்?
– கே.எம். ஸ்வீட்முருகன், கிருஷ்ணகிரி.
வீடு கட்டத் துவங்குவதற்கு முன்னால் முதலில் அவரவர் குலதெய்வத்தை வழிபட்ட பின்னர் தன் பெற்றோரை வணங்கி அனுமதி பெற்று அதன் பின்னரே துவங்க வேண்டும். பூமி பூஜை செய்யும் நாளன்று விசேஷமாக வாஸ்து பூஜை செய்ய வேண்டும். இந்த வாஸ்து பூஜையின் போது முதலில் கணபதி, நவகிரஹங்களை வழிபட்டு அவர்களுக்கு உரிய ஹோமத்தினைச் செய்துவிட்டு அஷ்ட திக் பாலகர்கள் ஆன இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு பேருக்கும் தனித்தனியே விசேஷ பூஜைகளைச் செய்து அதன் பின்னர் வாஸ்து புருஷனை வணங்கி வீடு
நல்லபடியாக கட்டி முடிக்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையைச் செய்வார்கள். இந்த பூமி பூஜையை வாஸ்து புருஷன் நித்திரை விடும் நாள் மற்றும் நேரம் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கும் காலத்தில் செய்வது உத்தமம்.

?ஜாதக கட்டத்தில் மாந்தி பற்றி சொல்லுங்கள்.
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
மாந்தி என்பது சனி கிரஹத்தின் துணைக்கோள். ஒவ்வொரு கிரஹத்திற்கும் நேர்மறையான பலன்களைத் தரும் திறனும் எதிர்மறையான பலன்களைத் தரும் திறனும் உண்டு. அந்த வகையில் சனி என்கிற கிரஹம் தரக்கூடிய எதிர் மறையான பலன்களை மட்டுமே தரக்கூடியதுதான் இந்த மாந்தி என்பது. ஜாதக கட்டத்தில் எந்த பாவகத்தில் மாந்தியின் சஞ்சாரம் அமைகிறதோ அந்த பாவகம் தரக்கூடிய நற்பலன்களைத் தடுத்து எதிர்மறையான பலன்களை இந்த மாந்தி என்பது தந்துவிடும் என்பதால்தான் கேரளத்து ஜோதிடர்கள் மாந்திக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். லக்ன பாவகத்தில் மாந்தி அமர்ந்திருந்தால் சுறுசுறுப்பு குறைந்து சோம்பேறித்தனத்துடன் காணப்படுவார்கள். இரண்டாம் வீட்டில் இருந்தால் பேச்சில் தடுமாற்றம், தனக்குறைவு, மூன்றில் அமர்ந்தால் தைரியமின்மை, நான்கில் இருந்தால் சொந்தமாக வீடு, வாகனம் இல்லாமை, அப்படி இருந்தாலும் அதனை அனுபவிக்க இயலாத நிலை, ஐந்தில் இருந்தால் புத்திரர்களால் கஷ்டம், ஆறில் இருந்தால் நீண்ட நாள் வியாதி, ஏழில் அமர்ந்தால் வாழ்க்கைத்துணையின் வாயிலாக பிரச்னைகள், எட்டாம் வீட்டில் அமர்ந்தால் குறைந்த ஆயுள், அகால மரணம், ஒன்பதில் இருந்தால் பித்ரு தோஷம், பத்தில் மாந்தி அமர்ந்தால் உத்யோகத்தில் ஸ்திரமற்ற நிலை, 11ல் இருந்தால் அவப்பெயர் உண்டாகுதல், 12ல் இருந்தால் உறக்கமின்மை, மனதில் நிம்மதியற்ற நிலை என்று ஒவ்வொரு பாவகத்திற்கும் பலன்களைச் சொல்லி இருப்பார்கள். சுபகிரஹத்தின் சேர்க்கை, பார்வை பலம் மற்றும் அந்த பாவக அதிபதிகள் பலம் பெற்றிருந்தால் மாந்தியின் அமர்வு நிலை குறித்து கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

?நிச்சயதார்த்தம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்தலாமா?
– ஜெ. மணிகண்டன், வேலூர்.

சாஸ்திர ரீதியான நிச்சயதார்த்தம் என்பது திருமணத்திற்கு முதல்நாள் நடத்துவதே ஆகும். தற்காலத்தில் செய்வது போல் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்போ அல்லது ஒரு வருடத்திற்கு முன்போ செய்துகொள்ளும் நிச்சயதார்த்தம் என்பது இருவீட்டாரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் ஒப்பந்தமே. இந்த ஒப்பந்தத்தில் ஏதேனும் சிக்கல் உண்டாகும்போது இரு வீட்டாரும் மணமக்களின் விருப்பத்தினை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் திருமணத்திற்கு முதல்நாள் பந்தலில் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு மறுநாள் அந்த திருமணத்தை நிறுத்தினால் குடும்பத்தில் தோஷம் என்பது வந்து சேரும்.

?ஆன்மிகம் என்பது வயதானவர்களுக்கு மட்டும்தானா? இல்லை எப்போது வேண்டுமானாலும் துவங்கிக் கொள்ளலாமா?
– ஜெ. மணிகண்டன், வேலூர்.

இந்த உலகில் ஒரு குழந்தை பிறக்கும்போதே ஆன்மிகத் தொடர்பு என்பது வந்துவிடுகிறது. பிறந்து ஒரு வருடம் வரை அந்தக் குழந்தை ஆண்டவனின் குழந்தையாகவே பார்க்கப்படுகிறது. பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை உறங்கும்போது சிரிக்கக் காணலாம். அப்படி உறக்கத்தில் சிரிக்கும்போது குழந்தைக்கு கனவில் கடவுள் விளையாட்டு காட்டுவதாக பெரியவர்கள் சொல்வார்கள். அதே போல குழந்தைக்கு முதன்முதலில் சோறு ஊட்டும்போதும் ஆலயத்தில் வைத்து அன்னப்ராசனம் என்கிற நிகழ்வைச் செய்வார்கள். ஒரு வயது ஆனதும் அதுவரை கடவுளின் குழந்தையாக வளர்ந்து வந்த நிலையில் நமது பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும் சடங்குதான் குலதெய்வம் ஆலயத்தில் வைத்து குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துவது என்பது. அதன்பிறகு அட்சர அப்யாசம் அதாவது குழந்தைக்கு எழுதச் சொல்லித் தருவதற்காக ஆலயத்தில் வைத்து சடங்கினைச் செய்வார்கள். இப்படி குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆன்மிகம் என்பது நம்முடனேயே பயணிக்கிறது. இதயத்துடிப்பு என்பது துவங்கும்போதே அங்கே ஆன்மிகமும் நம்முடன் இணைந்து விடுகிறது என்பதுதான் உங்கள் கேள்விக்கான நேரடியான பதில்.

?கோயிலில் உடைக்கப்படும் தேங்காய் குடுமியுடன் இருக்க வேண்டுமா?
– கோ. செல்வமுத்துக்குமார், சிதம்பரம்.

உடைக்கப்படுவதற்கு முன்னால் தேங்காய் எப்போதுமே குடுமியுடன்தான் இருக்க வேண்டும். தேங்காயை உடைத்த பின்னரே அதன் குடுமியைப் பிய்த்து எறிய வேண்டும். அது ஆலயத்தில் உடைக்கப்பட்டாலும் சரி, வீட்டில் சட்னிக்காக தேங்காயை உடைத்தாலும் சரி உடைத்த பின்னரே குடுமியைப் பிய்க்க வேண்டும்.

?பூஜையறையில் தெய்வங்களின் படத்துக்கருகில் மகான்களின் படத்தை வைத்து பூஜிக்கலாமா?
– எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ ரடி பாபா, ரமணர் போன்றவரின் படத்தினை இன்று பலரது இல்லங்களிலும் பூஜை அறையில் தெய்வங்களின் படங்களுக்கு அருகில் தரிசிக்கலாம். மகான்களும் தெய்வ நிலையை அடைந்தவர்களே எனும்போது பூஜையறையில் அவர்களது படங்களை வைத்து பூஜித்து வருவதில் எவ்வித தவறும் இல்லையே.

?ஆலயத்தை வலம் வருவது போல் திருமணத்தில் தாலி கட்டியதும் மூன்று முறை மணமேடையை வலம் வரச் சொல்வது ஏன்?
– ம. ஸ்ரீ கிருஷ்ணா, வழுவூர்.
மணமேடையை வலம் வரச் சொல்வதில்லை. மணவறையில் ஆவாஹணம் செய்யப்பட்டிருக்கும் அக்னியை வலம் வந்து வணங்கச் சொல்கிறார்கள். இந்த அக்னியின் சாட்சியாக நான் உன்னை மணம் முடிக்கிறேன். உனது கரங்களை பற்றுகிறேன். நம் வாழ்நாள் முழுவதும் நீயும் நானும் இணைபிரியாமல் வாழ்வதற்கு இந்த அக்னிதேவன் நம் வாழ்நாளின் இறுதி வரை துணை இருக்கட்டும் என்ற பிரார்த்தனையை முன் வைத்து மூன்று முறை வலம் வந்து வணங்குகிறார்கள். அந்த நேரத்தில் அந்த மணவறையில் எழுந்தருளியிருக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த மணமக்களை ஆசீர்வதிக்கிறார்கள். அந்த தேவர்களுக்கும் கந்தர்வர்களுக்கும் உரிய ஆஹூதியாக நெல்பொரியை ஹோமத்தில் இட்டு மணமக்கள் வணங்குவார்கள். இதுவே அந்த சடங்கின் பின்னால் இருக்கும் தத்துவம் ஆகும்.

Tags : K.M. Sweetmurugan ,Krishnagiri ,
× RELATED காஞ்சி – திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில்